இராமானுஜர்
ஞான வழியில் செல்வதைக் காட்டிலும் பக்தி வழியில் சென்றால் இறைவனை அடைய முடியும் என்று புதிய வழியைக் காட்டிய மகான் ஸ்ரீ இராமானுஜர். விசிஷ்டாத்துவைதம் எனும் கொள்கையை நாடு முழுவதும் வலியுறுத்தி சாதாரண மக்களிடமும் கொண்டு சென்ற மகான் ஸ்ரீ இராமானுஜர். தான் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை, இந்தக் கலியுகத்தில் பிறந்த பலரும் மோட்சமடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் குருவின் கட்டளையை மீறி எல்லா வளங்களையும் அளிக்க வல்ல மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்த வரும் இந்த இராமானுஜர்தான்.
இராமானுஜர் 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையில் பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் (04-04-1017) தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் எனும் ஊரில் அசூரி கேசவ தீட்சிதர் – காந்திமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இராமானுஜர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கூர்மையான அறிவுத் திறனுடன் இருந்தார். அவருக்கு எட்டு வயதான போது அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. இராமானுஜருக்கு அவர் தந்தையாரே முதலில் கல்வி அளித்தார். அவர் எதையும் ஒரு முறை படித்ததுமே புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவராக இருந்தார்.
அவருடைய தந்தையார் அவருக்கு பதினாறாம் வயதில் ரக்சாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். அவருக்குத் திருமணம் நடந்த சில காலத்திற்குள்ளாகவே அவரின் தந்தை மரணமடைந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குச் சென்றார். அப்போது வடநாட்டில் காசி எப்படி கல்விக்குப் பெயர் பெற்றிருந்ததோ அதுபோல் தென்னாட்டில் காஞ்சிபுரம் கல்விக்குப் பெயர் பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. இந்த நகரின் அருகிலுள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசர் என்கிற அத்வைத பண்டிதரிடம் வேதம் கற்றுக் கொள்வதற்காகச் சென்றார்.
யாதவப் பிரகாசரிடம் வேதம், உபநிடதம் போன்றவைகளைக் கற்றுக் கொண்டிருந்த இராமானுஜருக்கு அவரிடம் பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குருவின் விளக்கத்தை எதிர்த்து பலமுறை கருத்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு நாள் இராமானுஜர் தன் குருவின் பணிவிடையில் இருக்கும் போது இன்னொரு சீடன் அங்கு வந்து, யாதவப் பிரகாசரிடம், சாந்தோக்கிய உபநிஷத்தில் உள்ள “கப்யாஸம் புண்டரீகம்” என்னும் சொற்றொடருக்குப் பொருள் கேட்டான்.
“திருமாலின் சிவந்த கண்கள் குரங்கின் குதம் போல் இருந்தன” என்று அதற்கு விளக்கம் சொன்னார் யாதவப் பிரகாசர். அதாவது, கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரித்து, திருமாலின் சிவந்த கண்கள் “குரங்கின் ஆசனவாய்” போல் இருந்தன என்பதாகச் சொன்னார்.
திருமாலின் அழகிய கண்களை குரங்கின் புட்டத்தோடு ஒப்பிட்டுக் கூறிய குருவின் விளக்கத்தைக் கேட்ட இராமானுஜர், “மிகவும் அபத்தமான விளக்கம்” என்று குருவிடம் மறுத்துக் கூறினார்.
பின்னர், கப்யாஸம் என்பதை கம் + பீபதி + ஆஸம் என்று பிரிக்க வேண்டும். அப்போது கபி என்பது குளிர்ந்த நீரைப் பருகும் சூரியன் என்றும், ஆஸம் என்பது தாமரை என்றும் பொருள் தரும் என்று கூறினார். மேலும், “கதிரவனால் புன்னகைக்கும் கவின் மிகுந்த செங்கமலம் போன்றது கரிய மால் விழி அழகு” என்ற சரியானப் பொருளைக் கூறியதால் குருவின் கோபத்திற்கு ஆளானார்.
இராமானுஜர் மீது கோபம் கொண்ட யாதவப் பிரகாசர் அவரை கல்வியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு இராமானுஜர் வீட்டிலிருந்தபடி தாமாகவே வேதபாடங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இராமானுஜர் தாமாகப் பயின்றாலும் வேதபாடங்களில் மிகபெரும் புலமையுடன் விளங்கினார்.
இராமானுஜர் வைணவ வழிமுறைகளின் மிகப்பெரும் குருவாக விளங்கிய ஸ்ரீரங்கம் ஆளவந்தார் (யமுனாச்சாரியார்) என்பவரின் முக்கியச் சீடர்களான ஐந்து சீடர்களில் ஒருவரான காஞ்சிபூர்ணர் (திருக்கச்சி நம்பி) என்ற துறவியை ஒரு முறை சந்தித்தார். இவர் தந்தை நான்காம் வருணத்தைச் சேர்ந்தவர். தாய் வேடுவர் குலத்தைச் சார்ந்தவர். இருப்பினும் இவரை மிகுந்த மதிப்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இரவில் உணவு உண்ட பிறகு காஞ்சிபூர்ணர் இராமானுஜர் வீட்டின் இடை கழியில் படுத்துக் கொண்டார். இராமானுஜர் அவருடைய களைப்பு நீங்க அவரது கால்களைப் பிடித்து விட விரும்பினார். மேலும் அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டினார். ஆனால் அதற்கு காஞ்சிபூர்ணர் ஒத்துக் கொள்ளவில்லை. “நான்காம் வருணத்தைச் சேர்ந்த தம் கால்களை, அந்தணர் குலத்தைச் சேர்ந்த இராமானுஜர் பிடித்து விடுவது முறையல்ல. மேலும் ஒரு அந்தணருக்கு குருவாகத் தான் இருப்பதும் சரியல்ல ” என்று அவர் மறுத்ததால் இராமானுஜர் வருத்தமடைந்தார்.
“நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி, அதனால்தான் உங்களைப் போன்ற பெரியவர்களுக்குச் சேவை செய்யும் உரிமை எனக்குக் கிடைக்கவில்லை. பூணூல் அணிந்ததால் மட்டும் ஒருவன் பிராமணனாகி விடுவானா? திருமாலின் பக்தர்கள் அனைவரும் உண்மையான அந்தணர்கள்தான்” என்று இராமானுஜர் கூறினார். இதைக் கேட்ட காஞ்சிபூர்ணர் இராமானுஜர் மீது அன்பும், மதிப்பும் கொண்டார்.
தனக்கு குருவாக்க விரும்பிய காஞ்சிபூர்ணரை மீண்டும் ஒருமுறை சந்தித்த இராமானுஜர், அவரை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். அதற்கு சம்மதித்த அவர் தனது வேறொரு பணியை முடித்து வருவதாகத் தெரிவித்துச் சென்றார். பின் அவரது பணியை முடித்துக் கொண்டு அவசரமாக இராமானுஜர் இல்லம் சென்று, தனக்கு பேரருளாளன் திருவாலவட்டப்பணிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் எனவே உடனடியாக உணவளிக்க வேண்டினார். அச்சமயம் இராமானுஜர் வீட்டில் இல்லை. இராமானுஜர் மனைவியும் அவருக்கு உணவு அளித்தார். அவரும் இராமானுஜர் வருவதற்குள் உணவை முடித்துச் சென்றார்.
இராமானுஜர் வீடு திரும்புகையில், அவர் மனைவி காஞ்சிப்பூர்ணர் உண்ட தளிகையை கம்பால் தள்ளி, உணவருந்திய இடத்தை பசுஞ்சாணம் கொண்டு தூய்மையாக்கி நீராடி நிற்பதைக் கண்டு வருந்தினார். மனைவியின் இதுபோன்ற செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்கவில்லை.
ஸ்ரீரங்கம் திரும்பிய காஞ்சிபூர்ணர் இராமானுஜரின் விருந்தோம்பல், அன்பு ஆகியவற்றுடன் அவரது புலமையையும் அவருடைய குருவான ஆளவந்தாரிடம் எடுத்துக் கூறினார். ஏற்கனவே இராமானுஜரின் புலமை குறித்து அறிந்திருந்த ஆளவந்தார் தன் சீடர் காஞ்சிபூர்ணர் சொன்ன தகவலைக் கேட்டதும் வைணவ வழிமுறைக்குத் தனக்குப் பிறகு இராமானுஜரே தலைமைப் பொறுப்பேற்க வேண்டுமென்று விரும்பினார். இதற்காக இராமானுஜரை காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வர அவருடைய மற்றொரு சீடரான மஹாபூர்ணர் (பெரிய நம்பி) என்பவரை அனுப்பி வைத்தார்.
மஹாபூர்ணரும் காஞ்சிபுரம் சென்று இராமானுஜருக்கு வைணவ வழக்கப்படி தீட்சை அளித்து ஸ்ரீரங்கம் வந்து ஆளவந்தாரைச் சந்தித்துச் செல்லும்படி வேண்டினார். சில நாட்களுக்குப் பிறகு இராமானுஜரும் ஆளவந்தாரைத் தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம் புறப்பட்டார். ஆனால் அவர் ஸ்ரீரங்கம் போய்ச் சேரும் முன்பே ஆளவந்தார் இறைவனடி சேர்ந்திருந்தார். ஆளவந்தாரின் வலது கரத்தில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கி இருந்தன.
அதைக்கண்ட இராமானுஜர், திருவரங்கத்துப் பெரியோர்களிடம் “ஆளவந்தாரின் வலது கரத்தில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருக்க என்ன காரணம்?” என்று கேட்டார். அவர்கள் ஆளவந்தாரின் வியாஸ, பராசர முனிவர்களிடம் கொண்ட நன்றியறிவும், நம்மாழ்வரிடம் பற்றும், பிரம்ம சூத்திரமென்ற நூலுக்கு விசிஷ்டாத்துவைததிற்கிணங்க பாஷ்யம் எழுத வேண்டும் என்ற மூன்று மனக்குறையுமே அவரிடம் இருந்தன. தாங்கள் வந்த பிறகு இம்மூன்றையும் தாங்கள் செய்வதுடன், இந்த வைணவ வழிமுறைக்குத் தலைமைப் பொறுப்பையும் தாங்கள் ஏற்க வேண்டும் என்பதும்தான் அவருடைய கடைசிக்கால எண்ணமாக இருந்தது” என்றனர்.
இராமானுஜரும் ஆளவந்தாரின் மனக்குறைகளை இறையருளால் தீர்ப்பதாக உறுதி கூறினார். அவர் அப்படிக் கூறியதும் ஆளவந்தாரின் மடங்கியிருந்த மூன்று விரல்களும் தானாக நீண்டன. வைணவ வழிமுறைக்குத் தலைமைப் பொறுப்பேற்பவர் துறவியாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால், “இறைவனின் ஆசியிருந்தால் அதுவும் நிறைவேறும்” என்று சொன்னார். பின்னர் அவர், ஆளவந்தாரை உயிருடன் பார்க்க முடியாமல் போன வருத்தத்துடன் காஞ்சிபுரம் திரும்பினார்.
இராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த மஹாபூர்ணர் ஏற்கனவே அவரது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் ஆறு மாத காலம் வரை இராமானுஜரின் இல்லத்தில் தங்கியிருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைக் கேட்டறிந்தார்.
ஒரு நாள் மஹாபூர்ணர் மனைவிக்கும், இராமானுஜர் மனைவிக்கும் தண்ணீர் கொண்டு வரப் போன இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அறிந்த மஹாபூர்ணர் உடனே மனைவியை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். அச்சமயம் வெளியில் சென்றிருந்த இராமானுஜர் வீட்டுக்குத் திரும்பி வந்ததும் அவருக்கு வீட்டில் நடந்த நிகழ்வுகள் தெரிய வந்தது. மஹாபூர்ணர் தம் இல்லத்திலிருந்து சென்றது அறிந்து வருத்தமடைந்தார். ஏற்கனவே காஞ்சிப்பூர்ணர் வீட்டிற்கு வந்திருந்த போது அவருக்கு உணவளித்த பின்பு மனைவியின் செயல்பாடுகள் பிடிக்காத நிலையிலிருந்த இராமானுஜர், மஹாபூர்ணர் மற்றும் அவரது மனைவியையும் சண்டையிட்டு அனுப்பிய மனைவியிடமிருந்து பிரிந்துவிடுவது என முடிவு செய்தார். அவர் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்பினார்.
அதன் பிறகு, மதுராந்தகத்திலுள்ள ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் மஹாபூர்ணரைச் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் மஹாபூர்ணர் இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து வைத்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்றிருந்த இராமானுஜர், அக்கோயிலிலேயே, இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். இதன் பிறகு துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் “யதிராஜர்” என்னும் திருநாமம் பெற்றார்.
இவர் மனைவியைப் பிரிந்து துறவியான செய்தி அறிந்த ஸ்ரீரங்கத்துப் பெரியவர்கள் ஆளவந்தாரின் விருப்பத்திற்கிணங்க வைணவ வழிமுறைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இராமானுஜர் ஸ்ரீரங்கம் சென்று தலைமைப் பொறுப்பேற்றார். இதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகப் பொறுப்பும் அவருக்கு வந்தது. அவரும் இன்முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். கோயிலுக்குக் கிடைத்த வருமானம் அனைத்தையும் கோயில் பூசைகளுக்குப் பயன்படுத்தச் செய்தார். நாள்தோறும் பிச்சை பெற்று வந்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
அங்கு வாழ்ந்து வருகையில், சில மந்திரங்களுக்கு ஆளவந்தார் கூறீய உண்மை அர்த்தம் அவர்களுடைய சீடர்களிடமிருந்தது இராமானுஜருக்குத் தெரிய வந்தது. சில மந்திரங்களை அவருடைய சீடர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டார். ஆனால் ஓர் உயர்ந்த மந்திரத்தின் பொருளை ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் கோஷ்டிபூரணர் என்பவருக்கு மட்டும் அவர் உபதேசித்திருந்தது தெரிய வந்தது. கோஷ்டிபூரணரிடம் உள்ள அந்த உயர்ந்த மந்திரத்தைக் கற்றுக் கொள்ள விரும்பி அவரைச் சென்று பார்த்தார். அவர் இராமானுஜரைச் சிறிது காலத்திற்குப் பிறகு வருமாறு தெரிவித்தார். இப்படியே 18 முறை சொல்லித் திருப்பி அனுப்பினார். 19 வது முறை இராமானுஜருக்கு அந்த மந்திரத்தையும், பொருளையும் உபதேசம் செய்ய முன் வந்தார்.
கோஷ்டிபூரணர் இராமானுஜரிடம், “இந்த மந்திரத்தைத் தகுதி இல்லாதவர்களுக்கோ அல்லது சாதாரணமானவர்களுக்கோ உபயோகிக்கக் கூடாது“ என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு அந்த மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.
மந்திர உபதேசத்திற்குப் பிறகு இராமானுஜர் தம் இடத்திற்குப் புறப்பட்டார். வழியில் திருக்கோஷ்டியூர் நரசிம்மர் கோயிலில் ஒரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே அதிகமான வைணவர்கள் கூடியிருந்தனர். இவ்வளவு வைணவர்களையும் ஒரே இடத்தில் கண்ட இராமானுஜர் அந்தக் கோயில் சுவற்றின் மீது ஏறி நின்று கொண்டார். கோஷ்டிபூரணர் அவருக்கு உபதேசித்த “ஓம் நமோ நாராயண” எனும் மந்திரத்தையும், அந்த மந்திரத்தால் மோட்சமடைய முடியும் என்றும் சொன்னார்.
இதையறிந்த கோஷ்டிபூரணர் உடனே இராமானுஜரை அழைத்து வர அவருடைய ஆட்கள் சிலரை அனுப்பினார். அவர்கள் இராமானுஜரை கோஷ்டிபூரணரிடம் அழைத்துச் சென்றனர். கோஷ்டிபூரணர் கோபமாக, “நான் உனக்கு உபதேசித்த மந்திரத்தை, எனக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவிப்பதா?” என்று கடிந்து கொண்டார்.
இராமானுஜர் ஒன்றும் பேசாமல் இருந்தார்.
“குருவின் ஆணையை மீறி வாக்குறுதி தவறியவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?” என்று கேட்டார் கோஷ்டிபூரணர்.
“தெரியும். பத்தாயிரம் வருடங்கள் நரகத்தில் துன்பப்பட வேண்டியிருக்கும்” என்றார் இராமானுஜர்.
“தெரிந்துமா, இப்படி தவறு செய்தாய். என் கட்டளையை மீறி மந்திரத்தையும் அதன் பொருளையும் எல்லோருக்கும் உபதேசித்தது தவறில்லையா?” என்றார் கோஷ்டிபூரணர்.
“இம்மந்திரத்தைக் கேட்டவர்கள் அனைவரும் மோட்சம் பெறுவார்கள் என்று தாங்கள்தானே கூறினீர்கள். இவ்வளவு பெரிய வைணவர்கள் கூட்டத்தைக் கண்டு, குருவின் ஆணையை மீறுவதால் எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, கூட்டத்திலிருப்பவர்கள் அனைவரும் மோட்சம் பெறட்டும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் அனைவரும் கேட்க அதைக் கூறி விட்டேன். தங்கள் ஆணையை மீறியதற்கும், வாக்குறுதி தவறியதற்கும் தாங்கள் அளிக்கும் தண்டனை எதுவாயினும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்ட கோஷ்டிபூரணரின் கோபம் அடங்கியது. அவர் மீது அன்பு வந்தது. உடனே அவர் இராமானுஜரை “என் பெருமானாரே” என்றபடி கட்டித் தழுவிக் கொண்டார். “என் பெருமானாரே” என்றால் எல்லோருக்கும் தலைவர் என்று பொருள். இதனால் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்ற பெயர் ஏற்பட்டது.
ஆளவந்தாரின் இறப்பிற்குப் பின்பு, ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களை நிறைவேற்றுவதாகச் சொன்ன இராமானுஜர் அதன்படி அவருடைய சீடரான கூரத்தாழ்வானின் புதல்வருக்குப் பராசர பட்டர் என்கிற பெயரைச் சூட்டினார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு ஐந்தாம் வேதம் எனப் பெயர் தந்து அதைப் பெருமைப்படுத்தினார். வியாசரின் வேதாந்தத்தின் சூத்திரங்களுக்கு “ஸ்ரீ பாஷ்யம்” என்ற விரிவுரையை இயற்றினார்.
இராமானுஜர் பாஷியத்தில் சங்கரரின் அத்வைதக் கொள்கையைக் கண்டித்து, வேதம், உபநிடதம் ஆகியவற்றின் சரியான பொருள் எனக் கருதியதை எடுத்துக் காட்டினார். வேதாந்த சூத்திரங்கள் உருவமற்ற பொருளை வணங்குமாறு கூறவில்லை, கடவுளுக்கு உருவமுண்டு என்றே அவை கூறுகின்றன என்ற இராமானுஜர், “மோட்சம் பெற ஞானம் வழியல்ல. பக்தியே மோட்சத்திற்கான வழி” என்றும் குறிப்பிட்டார். சங்கரர் பல இடங்களில் பெளத்த வாதங்களைப் பயன்படுத்தியிருந்ததால் அவரை அரைப் பௌத்தர் என்று ஸ்ரீபாஸியத்தில் குறிப்பிட்டார்.
ஸ்ரீபாஷ்யம் எழுதி முடித்த பின்பு இராமானுஜர் தன் சீடர்கள் சிலருடன் தலயாத்திரை மேற்கொள்ளத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் பல பண்டிதர்களுடன் வாதங்கள் செய்து அதில் வெற்றி பெற்றார். அவர் யாருடன் வாதங்கள் செய்தாலும் அதில் அவரே வெற்றி பெற்றார். காஷ்மீர், காசி ஆகிய ஊர்களிலிருந்த சைவ, புத்த, சமண சமயப் பண்டிதர்கள் பலருடன் வாதங்கள் செய்து அவர் வெற்றி பெற்றார். இதனால் அவர் பெயரும், புலமையும் இந்தியா முழுமைக்கும் பரவியது. அவரது உபதேசங்களைக் கேட்டு பலர் வைணவத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பல அரசர்கள் அவரைப் பணிந்து சீடர்கள் ஆனார்கள்.
இப்படி இந்தியா முழுவதும் பயணித்துவிட்டு இராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பினார். அப்போது சோழநாட்டின் அரசனாக இருந்த கிருமிகண்ட சோழன் என்பவன் சைவ மதத்தைத் தீவீரமாகப் பின்பற்றி வந்தவன். இராமானுஜர் மூலம் வைணவம் வெகுவேகமாகப் பரவுவதைக் கண்ட அவன் மிகுந்த கோபம் கொண்டான். அவன் ஸ்ரீரங்கம் கோயிலில் “சிவாதி பரதரோ நாஸ்தி” என்று ஒரு பட்டயம் எழுதி வைத்தான். அதன் பொருள் “சிவனை விட மேற்பட்ட பரம்பொருள் இல்லை” என்பதுதான். அவனால் சைவ மதத்தை எதிர்த்தவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. அவன் வைணவர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தான். அவன் இராமானுஜரிடம் சிவனை விடப் பெரியவர் எவருமில்லை என எழுதி வாங்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டான்.
இராமானுஜரைக் காக்க அவரது சீடன் கூரத்தாழ்வான் அரசவைக்குச் சென்று, “நாராயணனே பரன்” என்று பலமுறை எடுத்துரைத்தான். மன்னன் அதற்கு இணங்காமல், “சிவனே பரன்” என்று எழுதச் சொன்னான். அவர், “மரக்கால் பெரியது, குறுணி அதைவிடப் பெரியது” என்ற பொருளில் “சிவாத் பரதரம் நாஸ்தி, த்ரோணமஸ்தி ததபரம்” என்று எழுதித் தந்து அரசனின் கோபத்துக்குள்ளானார். இதனால் அரசன் அவரது கண்களைக் குருடாக்க உத்தரவிட்டான்.
தன் சீடர் கண்களை இழந்தது கேட்டு இராமானுஜர் வருத்தமடைந்தார். அரசன் இராமானுஜரின் சீடரைக் கண்கள் குருடாக்கியது போல் இராமானுஜரை எப்படியும் கொன்றுவிட வேண்டுமென்று திட்டமிட்டான். இதைத் தெரிந்து கொண்ட இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து வெளியேறினார்.
இராமானுஜர், அந்த அரசன் இறக்கும் வரை, பன்னிரண்டு ஆண்டுகள் மைசூர் அருகிலுள்ள சாளக்கிராமம் எனுமிடத்தில் போய்த் தங்கியிருந்தார். அங்கு இருந்தபடியே வைணவப் பிரச்சாரம் செய்து வந்தார். இராமானுஜர் ஊர் ஊராகச் சென்று விசிஷ்டாத்வைத கொள்கையைப் பரப்பி வருகின்ற காலத்தில் தொண்டனூர் என்ற பகுதியை ஆண்டு வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இவருடைய சீடனானான். அவனுக்கு விஷ்ணு வர்த்தனன் என்ற பெயர் சூட்டி சீடனாக்கிக் கொண்டார்.
ஒரு நாள் இருவரும் காட்டுவழியே போய்க்கொண்டிருந்த போது துளசிக் காட்டில் ஒரு அடர்ந்த புதருக்கிடையில் திருநாராயணனின் சிலை ஒன்று தென்பட்டது. இராமானுஜர் விருப்பப்படியே விஷ்ணு வர்த்தனன் மைசூருக்கருகே உதயகிரி மலையின் மீது மேல்கோட்டை என்றழைக்கப்படும் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிமுடித்தான்.
முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது, டில்லி சுல்தான் கோயிலை இடித்து சிலைகளையும், பொன் பொருள் போன்றவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம்தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்த இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த சிலையை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் தன் மகளிடமிருந்து திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவ மூர்த்தியை அழைக்க வேண்டும. அந்தச் சிலை தானாகவே அவரிடம் வந்து சேர வேண்டும் என்றான்.
உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பது போல் ”என் செல்லப் பிள்ளாய் வருக” என்று குழைவாக அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்து மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். அவன் விதித்த நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப் போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி இன்றும் கூட ‘செல்லப்பிள்ளை’ என்றே அழைக்கப்படுகிறார்.
சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து ‘பீபீ நாச்சியார்” என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் வைரமுடிசேவை விழாவில் இவ்விருவரும் சேர்ந்தே வீதி உலா வரும் வழக்கம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ”அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்” என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.
அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள், “கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை” என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்றனர். இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருந்த அந்தக் காலத்தில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் கொண்டு சென்ற பெருமை இதன் மூலம் இராமானுஜருக்குக் கிடைத்தது.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ஆற்றில் குளிக்கச் செல்லும் போது தனது சீடர்களுள் உயர்குலத்தைச் சேர்ந்த நம்பியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய இருவரின் தோள் மீதும் கைபோட்டபடி செல்வார். குளித்து விட்டுத் திரும்பும் போது வில்லிதாசன் எனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் தோளில் கை போட்டபடி திரும்புவார். இராமானுஜரின் இச்செயலில் எரிச்சலடைந்த உயர்சாதியினர் அவரைப் பற்றித் தவறாக விமர்சித்தனர். அப்போது, “வில்லிதாசனைத் தொடுவதால்தான் நான் மிகவும் சுத்தமாகிறேன்” என்பார்.
ஆளவந்தாரின் மாணவர் மஹாபூர்ணரின் நண்பர் மாறனேரி நம்பி. இவர் பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியினர். மாறனேரி நம்பி இறந்தவுடன் அவருக்கான இறுதி சடங்குகளை செய்தவர் மஹாபூர்ணர். ஒரு தாழ்ந்த சாதியினனுக்கு பிராமணன் இறுதி சடங்கு செய்யலாமா? என திருவரங்கத்து உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்த போது அதை முறியடித்தவர் இராமானுஜர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரியில் வசித்த மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த இராமானுஜரின் புரட்சி இன்றும் போற்றப்படுகிறது. ”பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. கல்வியில் சிறந்தவரே உயர்ந்தவர். தவம், கல்வி, ஆள்வினை இவற்றால் ஆவதே குலம்” என்றார் இராமானுஜர்.
இராமானுஜர் வட மொழியில் நித்ய க்ரந்தம், கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த ஸாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்க்ரஹம், மற்றும் கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார். ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் மூலம் இராமானுசருக்கு எட்டிய வைணவ சமயத்தை திருவரங்கரே எம்பெருமானார் தரிசனமென்று பெயரிட்டார் என்றும், திருக்குறுகூர் நம்பியே இராமானுசரிடம் சீடராக ஆசைப்பட்டு திருவிலச்சிணை பெற்று வைணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார் என்றும் இராமானுஜரின் புகழ் பரப்பும் சில வரலாறுகள் சொல்கின்றன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், விசிஷ்டாத்வைதத்தை நாடெங்கும் பரப்பிய புரட்சியாளரான இராமானுஜர் தனது நூற்றியிருபதாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இவ்வுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது சீடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித்தந்து, இராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” யாய் கோவில் கொண்டார். இவ்வாறு கோவில் கொண்ட ஒருவாரத்திலேயே இராமானுஜர் நோய்வாய்பட்டு காலமானார். இவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை ஸ்ரீரங்கத்து பெரியோர்களும் அவர் சீடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலை அமைத்து வழிபடலாயினர். இந்தத் திருமேனி “தானான திருமேனி” என்றழைக்கப்படுகின்றது. பின்பு திருநாராயணபுரத்து சீடர்கள் வழிபட அமைத்த உருவம் “தமருகந்த திருமேனி “என்றழைக்கப்படுகின்றது.
ஆதிசங்கரர்
தேனி. எம். சுப்பிரமணி
இந்து மதத்தில் மட்டும் முன்பு 72 பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தாங்கள் விரும்பும் தெய்வமே முதற்கடவுள் என்கிற எண்ணம் இருந்தது. இதனால் இந்தப் பிரிவுகளிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க முயன்றதுடன் 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளைத் தவிர்த்தும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று வகைப்படுத்தியதுடன், அத்வைதம் எனும் கொள்கையை வலியுறுத்திய ஆன்மிக மகான் ஆதிசங்கரர். இந்த மகானைப் பற்றி அறிந்து கொள்வோமா?
கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும், தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர். இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறைபக்தியும் கொண்டு, பலருக்கும் வழிகாட்டியாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
சிவபெருமானும், “உங்கள் விருப்பப்படியே நற்குணமுடைய ஒரு குழந்தை உங்களுக்குப் பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை குறுகிய காலமே உயிர் வாழும். அந்தக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் மகானாகவும் இருப்பார்.” என்று சொல்லி மறைந்தார்.
சிவபெருமான் அளித்த வரத்தின்படி 788 ஆம் ஆண்டு வசந்த ருதுவில் வைசாக சுக்லபக்ஷத்தின் ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அத்தம்பதியரும் அந்தக் குழந்தைக்கு சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான “எல்லா நலனும் அளிப்பவர்” என்கிற பொருளிலான “சங்கரன்” என்கிற பெயரைச் சூட்டினர்.
சங்கரன் சிறு குழந்தையாக இருந்த போதே மிகச்சிறந்த அறிவுத் திறனுடன் விளங்கினார். சங்கரனுக்கு ஏழு வயதான போது அவர் தந்தை காலமானார். தந்தை காலமான பின்பு அவரது தாய் அவருக்கு உபநயனம் செய்வித்து அக்கால வழக்கப்படி குருகுலத்திற்கு வேதபாடங்கள் கற்றுக் கொள்ள அனுப்பினார். குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் தினமும் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அதன் பின்பு உண்பதுதான் வழக்கம்.
ஒரு முறை சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குச் சென்றார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டின் முன்பு நின்று, “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார். வீட்டிலிருந்து எந்தப் பதிலுமில்லை. பிச்சை எடுக்கும் போது மூன்றுமுறை அழைக்க சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனால் மீண்டும் இருமுறை “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார்.
பிச்சை கேட்கும் குழந்தைக் குரலைக் கேட்டு, அந்த ஏழை அந்தணனின் மனைவி வாசலுக்கு வந்து பார்த்தார். அங்கு பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சைப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார். பிச்சை கேட்கும் பாலகனைப் பார்த்த ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டாள்.
தனக்காக, கணவனுக்கென வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் நல்ல மனதுடன் பிச்சை அளித்த அந்தப் பெண்மணியின் ஏழமை நிலை கண்டு வருந்திய சங்கரர் திருமகளை வேண்டி, “கனகதாரா ஸ்தோத்திரம்” என்ற துதியை இயற்றிப் பாட ஆரம்பித்தார். அவர் பாடி முடித்ததும் அந்த வீட்டின் கூரையிலிருந்து தங்க நெல்லிக்கனிகள் பல அந்த வீடு முழுவதும் சிதறி விழுந்தன.
அன்றிலிருந்து சங்கரரின் அற்புதச் செயல்கள் தொடங்கின. முதுமை அடைந்த அவரது தாயால் ஆற்றிற்குச் செல்ல முடியவில்லை. இதைக் கண்ட அவர் தன் தாய் இருக்கும்படி ஆற்றைச் செல்ல வைக்க நினைத்தார். அதன்படி பூர்ணா நதியை அவர் தாய் இருந்த வீட்டிற்குப் பின்புறமாகச் செல்லும்படி பணித்தார். பூர்ணா நதியும் தன் போக்கை மாற்றி சங்கரர் வீட்டின் பின்புறமாகச் செல்லத் தொடங்கியது.
சங்கரரின் அற்புதச் செயல்களைப் போலவே, இளம் வயதிலேயே அவரது புலமையும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையறிந்த அத்தேசத்து மன்னர் சங்கரரை தன் அரசவையில் புலவராக்க விருப்பம் கொண்டார். ஒரு யானை மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவரை அரசவைக்கு அழைத்து வர தன் மந்திரியை அனுப்பி வைத்தார். அந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மறுத்த சங்கரர் தனக்கு “அரசவைப் பணியை விட ஆன்மிகப் பணியே விருப்பம். எனவே மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது” என்று சொல்லி மந்திரியைத் திருப்பி அனுப்பினார்.
மந்திரி மன்னரிடம் சங்கரர் சொன்ன பதிலைச் சொல்லவும், மன்னருக்கு சங்கரரை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. மறுநாள் அவர் சங்கரரைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் சங்கரரிடம் பத்தாயிரம் பொற்காசுகள் மற்றும் சில நூல்களைப் பரிசாக வழங்கினார். சங்கரர் நூல்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பொற்காசுகள் அனைத்தையும் அவரிடமே திருப்பி வழங்கினார். மன்னர் அவருடைய ஆன்மிக எண்ணத்தையும், அதற்கான செயல்பாட்டையும் பாராட்டி விடை பெற்றுச் சென்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சங்கரர் வீட்டுச் சூழலிலிருந்து வெளியேற விரும்பினார். ஆனால் சங்கரரின் தாய் வயதாகிவிட்ட நிலையில், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காக மகனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனால் சங்கரர் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் சந்நியாசத்தை விரும்புவதாகத் தெரிவித்து வந்தார். சங்கரரின் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரரும் அவரது தாயாரும் குளிக்கச் சென்றிருந்தனர். அப்பொழுது ஒரு முதலை சங்கரர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த சங்கரரின் தாய் பயந்து மகனைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். அப்பொழுது தாயை அமைதிப்படுத்திய சங்கரர் தன் தாயிடம் “தாயே! நீங்கள் என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,” எனக் கதறினார்.
தன் பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர் தாயும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அதன் பிறகு அந்த முதலை அழகான கந்தர்வனாக மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். சங்கரர் அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.
அப்போது அவரது தாய் மகனிடம், தான் உலகைத் துறக்கும் காலத்தில் (மரணமடையும் நிலையில்) சங்கரர் எங்கிருந்தாலும் தாயிடம் வந்து சேர வேண்டும் என்பதுடன் மகனாகத் தாயின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சங்கரரும் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி, இமயமலை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
சங்கரர் இமயமலை நோக்கிச் செல்லும் போது வழியிலிருந்த பல புனிதத் தலங்களுக்கும் சென்று வணங்கினார். இமயமலைக்குச் சென்ற அவர் பத்ரிநாத் பகுதியிலிருந்த கோவிந்த பகவத் பாதர் என்பவரைச் சந்தித்தார். அவர் மாண்டூக்ய, காரிக போன்ற உபநிடதங்களை எழுதிய கவுடபாதரின் சீடராவார். தனக்கென ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்த சங்கரர் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு வேதபாடங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
அவரிடம், தான் கேரளாவிலிருந்து வருவதாகவும், தன்னுடைய இளம் வயதில் தந்தை காலமான பின்பு தாயின் பராமரிப்பில் அருகிலுள்ள குருகுலத்திற்குச் சென்று வேதங்கள் சாஸ்திரங்கள் கற்றதையும் தெரிவித்தார். தனக்கு தாய் திருமணம் செய்து வைக்க விரும்பியதையும், தான் அதை மறுத்து ஆன்மிக வழியில் ஈடுபட விரும்பியதையும் தெரிவித்தார். இதற்காக ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தன் காலை முதலை ஒன்று கடித்ததாகவும், அதிலிருந்து விடுபட அம்மாவிடம் அனுமதி பெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும் தெரிவித்தார். தற்போது முழு சந்நியாச தீட்சை அளித்து வேதாந்தத்தைத் தனக்கு முழுமையாகக் கற்றுத் தரும்படியும் வேண்டினார்.
அவருடைய உண்மையான பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற கோவிந்த பகவத் பாதர் அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு துறவறத்தில் உயர்ந்ததும், சிறந்ததுமான “பரமஹம்ச சந்நியாச தீட்சை” அளித்து தாம் தம் குருவிடமிருந்து கற்றவற்றைப் போதித்தார். வேதங்கள் முழுவதையும் அவருக்குக் கற்றுக் கொடுத்ததுடன் அத்வைத சித்தாந்தத்தையும் எடுத்துச் சொன்னார்.
அத்வைத சித்தாந்தத்தில் உலகில் தத்தம் கர்ம வினையினால் தோன்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறை தத்துவம் அல்லது ஆத்ம தத்துவம் ஒன்றே என்பதும், இறைவனும் ஆத்மாவும் ஒன்றே என்றும் கற்பிக்கப்படுகிறது. குருகுலவாசம் முடிந்த பின்னர் சங்கரரை பாரத நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு அத்வைதக் கொள்கைகளை அனைவருக்கும் உணர்த்தும்படி கோவிந்த பகவத் பாதர் அறிவுறுத்தினார்.
குருவின் அறிவுறுத்தலுக்குப் பின்பு சங்கரர் காசி நோக்கிச் சென்றார். சங்கரர் காசியிலிருந்து தொடங்கி பாரதத்தில் பல சமயத் தலைவர்களுடன் சமயக் கருத்துக்களிலான விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அத்துடன் தன் குருவின் கட்டளைப்படி அத்வைதக் கொள்கைகளை நாடு முழுவதும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார். அவரைப் புலையன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் ஒன்று இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் அவனிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவன் மாமிசத்தைச் சாப்பிட்டபடி சங்கரரை நெருங்கினான்.
இதைக் கண்ட சங்கரர், “டேய், விலகிப் போடா!” என்று எச்சரித்தார். அவன் உடனே, “நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலக வேண்டும்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. இதையடுத்து “மனீஷா பஞ்சகம்” என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கு புலையன் வேடத்தில் வந்த சிவபெருமான் காசிவிஸ்வநாதராக மாறிக் காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம்தான் சங்கரருக்கு அத்வைத ஞானம் முழுமையாகக் கிடைத்தது. இதன் மூலம் சாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார் என்று சங்கர விஜயம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஞானிக்கு பக்தி அவசியமா?
ஒரு சமயம், ஆதிசங்கரர் ஆகாய வழியில் வானில் பறந்து சென்ற போது, மூவுலகிலும் இருப்பவரான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
“அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
“இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்க செல்கிறேன். நீங்களும் வாருங்களேன்” என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர்.
“விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல” என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.
குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும் போது, சங்கரர் வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தினார். பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், “ஞானிக்கும் பக்தி அவசியம்’ என்று எடுத்துக் கூறினார். நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார்.
இன்றும் குருவாயூரப்பன் வீதி உலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்கின்றனர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம். (தொன்ம நம்பிக்கை). என்றும் சொல்கிறார்கள்.
அத்வைதம் மூலம் உலகிற்கு ஒரு புது ஒளி ஏற்றிய சங்கரர் தன் புலமையால் வேதாந்த சூத்திரங்களை எழுதிய பட்ட பாஸ்கராவை விவாதத்தில் வென்றார். இதுபோல் தண்டிக்கும், மயூராவிற்கும் வேதாந்தத்தைக் கற்பித்தார். அபினவ குப்தா, முராரி மிஸ்ரா, உதயணாசாரியர், தர்ம குப்தர், குமரில, பிரபாகரா போன்றோரையும் பல்வேறு இடங்களில் நடந்த விவாதங்களில் வென்றார். இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் தன் புலமையால் வெற்றியைப் பெற்று தன் கொள்கைகளை வலியுறுத்திச் சென்று கொண்டிருந்தார். அவருடன் விவாதத்தில் தோற்ற பலரும் அவருடைய சீடராக மாறினார்கள்.
இந்நிலையில் சங்கரர் மஹிஷ்மதியில் கர்மமீமாம்சத்தில் தேர்ந்தவரும், சந்நியாசிகளை வெறுப்பவருமான மண்டன மிஸ்ரர் என்பவரை சந்தித்தார். சங்கரர் மண்டன மிஸ்ரரை பொதுவான விவாதத்திற்கு அழைத்தார். விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட அவர் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான தம் மனைவி சரசவாணியை (பாரத தேவி என்றும் குறிப்பிடுவர்) நடுவராகக் கொள்ள சம்மதித்தார். சங்கரர் தோல்வியுற்றால் கிருகஸ்தாஸ்ரமத்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும், மண்டன மிஸ்ரர் தோற்றால் தம் மனைவியிடமிருந்தே காஷாயம் பெற்று சந்நியாசியாக வேண்டும் என்றும் சபையோர் முன்னிலையில் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இரவும், பகலுமாக மண்டன மிஸ்ரருக்கும், சங்கரருக்குமிடையே வாத விவாதம் பதினேழு நாட்களுக்கு தொடர்ந்தது. சரசவாணி இருவர் கழுத்திலும் மலர்ந்த புஷ்பங்களால் உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை அணிவித்து விட்டு தம் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார். கடைசியில் மண்டன மிஸ்ரர் அணிந்திருந்த மலர்மாலை முதலில் வாடத் தொடங்கியது. இதன் பின்பு மண்டன மிஸ்ரர் தம் தோல்வியை ஏற்றுக் கொண்டார். காஷாயம் தரித்து சங்கரரின் சீடரானார்.
இதைக் கண்ட சரசவாணி தம் கணவரின் பத்தினியான தம்மையும் வென்றால் தான் வெற்றி முழுமை அடையும் என்று கூறினார். முதலில் பெண்ணுடன் விவாதிப்பதா என்று சங்கரர் தயங்கினாலும், அவ்வம்மையார் சங்க கால மகளிரின் புலமையை பல மேற்கோள்களுடன் எடுத்துக்காட்ட பின்னர் சம்மதித்தார். சங்கரர் மேலும் பதினேழு நாட்கள் தொடர்ந்து விவாதித்து வெற்றி பெறும் நிலையில் இருந்தார். அப்பொழுது சரசவாணி பிரம்மசாரியான சங்கரரிடம் காம சாஸ்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். சந்நியாசியான சங்கரரால் அதற்குப் பதில் சொல்ல இயலவில்லை.
சங்கரர் சரசவாணியிடம் தன் தோல்வியைத் தற்காலிகமாக ஒப்புக் கொண்டதுடன் தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்குமாறும் வேண்டினார். ஒரு மாத காலத்திற்குள் அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும் கூறிச் சென்றார். சரசவாணியும் அதற்குச் சம்மதித்தார்.
அதன் பிறகு சங்கரர் தன் சீடர்களுடன் காசிக்குச் சென்றார். இல்லறவியலைக் கண்டறியவும், சிற்றின்பத்தின் எல்லையை அறியவும், மது, மங்கை, மோகம், காமம் போன்ற கலைகளை அறியவும், சந்நியாசியான தன் உடலால் இன்பம் எதுவும் அனுபவிக்கக் கூடாது என்றும் முடிவு செய்த அவர் பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) செய்ய முடிவு செய்தார்.
இதற்காகத் தான் பிரவேசிக்கப் போகும் உடல் கிடைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து ஆத்ம யோகத்தில் அமர்ந்தார். சங்கரரின் யோக நிலையில் அந்த நாட்டு மன்னன் அமரூகன் என்பவன் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் மரணமடைந்தது தெரிந்தது. அவன் அதிகமாக மது அருந்துவதுடன் காமப்பித்து பிடித்து பல கன்னியர்களைக் கொண்டு வந்து இன்பம் அனுபவித்து வந்தவன் என்பதும் தெரிந்தது.
உடனே தன் சீடர்களில் முக்கியச் சீடரான பத்மபாதர் என்பவரை அழைத்து, “இந்த நாட்டு மன்னன் காமுகன், பல கன்னியர்களுடன் இன்பமுற்றவன். மது அருந்துபவன். அளவுக்கதிகமாக மது அருந்தியதால் அவன் இன்று இறந்து விட்டான். அவன் உடலில் தான் பிரவேசிக்கப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட சீடர் பத்மபாதர், “தாங்கள் முற்றும் துறந்த சந்நியாசி மற்றும் ஞானி. தாங்கள் இறந்து விட்ட அந்த அரசன் உடலில் பிரவேசித்து அந்தப்புரத்து அழகிகளுடன் இருப்பதாலும், அரண்மனையில் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கையில் வாழ்வதாலும் தங்கள் உண்மைத் தன்மைக்கு ஊறு ஏற்பட்டு விடாதா?” என்று கேள்விகளைக் கேட்டார்.
சங்கரர், “தேளாலும், பாம்பாலும் நமக்குப் பயம் உண்டாகிறது. நாமே தேளாகவும், பாம்பாகவும் மாறிவிடும் போது பயம் தேவையில்லை. நான் சரசவாணியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அதற்கு இதுவே சரியான வாய்ப்பு. அரசன் அமரூகன் உடலில் பிரவேசித்து அனுபவப்பூர்வமாக விடை அறிந்து கொள்வேன். ஒரு மாத காலத்திற்குள்ளாகவே என் உடலுக்குத் திரும்பி விடுவேன். அதுவரை இந்த உடலை அகோபில குகையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருங்கள்” என்று கூறியபடி கீழே படுத்தார்.
அந்த உடலிலிருந்து சங்கரரின் ஆவி பிரிந்து சென்று அரண்மனையில் இறந்து கிடந்த அரசன் அமரூகன் உடலுக்குள் பிரவேசித்தது. அமரூகன் உயிர் பெற்று எழுந்தான். அவனுக்குச் சிகிச்சையளித்த வைத்தியரும், அருகிலிருந்த அமைச்சரும் ஆச்சர்யமடைந்தனர். உடனே ராணி, அரசனும் தன் கணவனுமான அமரூகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அமரூகன் விரும்பும் மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தாள். அமரூகன் அதை வாங்கிக் கீழே ஊற்றி விட்டு இந்த விசத்தை இனி குடிக்க மாட்டேன் என்றான். ராணி மீண்டும் மீண்டும் ஊற்றிக் கொடுக்க அவனும் குடிக்க மாட்டேன் என்றவாறு கீழே ஊற்றிக் கொண்டேயிருந்தான்.
மரணத்துக்குப் பின்பு உயிர்த்தெழுந்த மன்னன் தன் எண்ணங்களாலும், குணநலன்களாலும் முற்றிலும் மாறியிருந்ததைக் கண்டு ராணிகளும், அமைச்சர்களும் மகிழ்ந்தனர். அரசனின் உடலில் இருப்பது அமரூகன் உயிரல்ல, வேறு ஏதோ ஒரு மகானின் உயிர் என்பதை உணர்ந்து கொண்டனர். மன்னனை அந்த மகானின் உயிருடன் அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினர்.
இதனால் சில தூதுவர்களை அனுப்பிச் சுற்றுப்புற காடுகளிலும், குகைகளிலும் யோக வல்லுனர், ஞானி ஒருவரின் உடல் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்று தேடி அழிக்க உத்தரவிட்டனர். அவர்களும் உயிரற்ற உடல் எங்கிருந்தாலும் அழிக்கும் நோக்கத்துடன் சென்றனர். சர்வ சக்தி படைத்த மாயையின் வசமான சங்கரர் அரசிகளுடன் கூடி மகிழ்ந்து அம்ரூகன் பெயரால் அமரூகம் எனும் தனி காவியத்தையும் எழுதிக் கொண்டிருந்தார். இதனால் தாம் வந்த காரியத்தையும், தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்திருந்தார்.
சங்கரர் அமரூகனின் உடலில் பிரவேசித்து ஒரு மாத காலமாகக்கூடிய நிலையில் குரு வராமல் போகவே அவருடைய சீடர்கள் அரசவையை அடைந்தனர். அவர்கள் மன்னர் முன் சில தத்துவப் பாடல்களைச் சொல்ல சங்கரருக்கு பூர்வாசிரம நினைவுகள் திரும்பியது. தான் எழுதிக் கொண்டிருந்த அம்ரூத காவியத்தைச் சீடர்கள் கையில் கொடுத்து விட்டுத் தம் உடலைத் தேடிப் புறப்பட்டார். அம்ரூகன் உடல் கீழே விழுந்தது. இதற்குள் அரச தூதுவர்கள் அகோபில குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரரின் உடலை எடுத்துச் சென்று எரியூட்டத் தொடங்கி இருந்தனர். இதையறிந்த சங்கரர் தன் யோக சக்தியினால் சிதையிலிருந்த தனக்குரிய உடலுக்குள் பிரவேசித்தார். அப்படியே சிதையில் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்திடவும் வேண்டினார். மழை பெய்து தீ அணைந்தது.
அதன் பிறகு சங்கரர் சிதையிலிருந்து எழுந்து வந்தார். தான் எழுதிய அம்ரூக காவியத்துடன் மீண்டும் மண்டன மிஸ்ரருடைய இல்லத்திற்குச் சென்று சரசவாணியின் எல்லாக் கேள்விகளுக்கும் தக்கவாறு பதிலளித்து வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் மண்டன மிஸ்ரர் மற்றும் அவரது மனைவி சரசவாணி இருவரும் சேர்ந்து தங்களுடைய செல்வம் அனைத்தையும் சங்கரருக்குக் கொடுத்தனர். தங்களைச் சீடராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டினர். சங்கரர் அதை அவ்வூரிலிருந்த ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பகிர்ந்தளித்தார். மண்டன மிஸ்ரருக்கு சுரேஷ்வராச்சார்யா என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த மடத்திற்கு பீடாதிபதியாக்கினார். சரசவாணியை சிருங்கேரி மடத்தின் சாரதையாக இருக்கச் செய்தார். (மண்டன மிஸ்ரர், சரசவாணி ஆகியோர் பிரம்மா, சரசுவதி ஆகியோரின் அம்சம் என்று சொல்கின்றனர்)
சங்கரர் என்றாலே அவர் சைவ அல்லது வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சங்கரரை “ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்” என்று சொல்வார்கள். அவர் காலத்தில் இந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத நிலையிருந்தது. மேலும் பெளத்த மற்றும் சமண சமயங்களால் பெருகிய வேற்றுமைகளால் இந்து மதம் அழிந்து போய்விடும் நிலையும் இருந்தது. இந்நிலையில் சங்கரர் இந்துமத பிரிவுகளிடையிலான சண்டை, சச்சரவுகளை குறைக்க முடிவு செய்தார். அவர் காலத்தில் இந்து மதத்தில் மட்டும் சுமார் 72 பிரிவுகள் இருந்தன. இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளை ஒதுக்கியும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று முக்கியமான ஆறு வழிமுறைகளை வகைப்படுத்தினார். அவை;
1. சைவம் – சிவனை வழிபடுபவர்கள் – சைவர்கள்
2. வைணவம் – விஷ்ணுவை வழிபடுபவர்கள் – வைணவர்கள்
3. காணாபத்யம் – கணங்களுக்கு எல்லாம் அதிபதியான “கணபதி” வழிபாடு செய்பவர்கள் – காணாபத்யர்
4. கெளமாரம் – முருகனை வழிபடுபவர்கள் – கௌமாரர்கள்
5. சௌரம் – சூரியனை வழிபடுபவர்கள் – சௌரர்கள்
6. சாக்தம் – சக்தியை வழிபடுபவர்கள் – சாக்தர்கள்
இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஆறு பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் இறைவன் ஒருவனையே சாரும் என்றும் இவையனைத்தும் சேர்ந்து ஷண்மதம் என்றும் சொன்னார்.
ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், “இவர் மட்டுமே உனக்குக் கடவுள்” என்று எவரையும் கட்டாயப்படுத்தாமல், இந்த அறுவரில் எவரை விரும்பினாலும் அவரையே முழு முதற் கடவுளாகப் போற்றலாம்” என்று வழி காட்டுகிறது சங்கரரின் அத்வைதம். இதுபோல், “உன்னுடைய விருப்ப தெய்வமே மற்ற கடவுளாகவும் வடிவம் தாங்கி இருக்கின்றது என்றும் இந்தச் சித்தாந்தம் சொல்கிறது. ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிகளையும் தானே இயற்றித் தந்தார்.
இந்நிலையில், சங்கரரின் தாய் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருப்பதை சங்கரருக்கு சிலர் தெரிவித்தனர். இதைக் கேள்வியுற்றதும் தாம் தாய்க்கு அளித்த வாக்குறுதியின் படி தம் சீடர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காலடிக்குத் திரும்பினார். தாய்க்கு வாக்களித்த படி “வெறுமனே” வர முடிந்ததே தவிர,குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க அவரால் முடியவில்லை. அவர் தன் தாயின் கால்களைத் தொட்டு வணங்கியபடி, “மாத்ரு பஞ்சகம்” என்று உள்ளம் உருகும் ஐந்து பாடல்களைப் பாடினார்.
தாயின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானிடம் தாயின் அந்திம காலம் சிரமமில்லாமல் இருக்க வேண்டினார். இவரின் வேண்டுதலை அறிந்த சிவபெருமான் சிவகணங்களை அனுப்பி வைத்தார். சிவகணங்களின் உருவங்களைக் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள் சங்கரரிடம், தனக்குப் பயமாக இருக்கிறது சிவகணங்களுடன் கைலாசம் செல்ல முடியாது என்றும் மறுத்தார். உடனே சங்கரர் விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவின் தூதுவர்கள் அவரது தாயாரை வைகுண்டம் அழைத்துச் சென்றனர்.
பழமைவாதிகளான நம்பூதிரி பிராமணர்கள் சன்னியாசியான சங்கரரை இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று தடுத்தனர். நம்பூதிரி பிராமணர்களின் உத்தரவை மீறி அவருக்கு உதவவும் அங்கிருந்த பலரும் மறுத்தனர். அவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்கு நெருப்பைக் கூட அளிக்க மறுத்தனர். ஆனால் சங்கரர் தன் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதிப்படி தானே தனியாகத் தன் தாயின் உடலைப் புழக்கடைக்கு எடுத்துச் சென்று வைத்து, வாழைமரப் பட்டைகளைக் கொண்டு அடுக்கி அதைத் தன் யோக சக்தியினால் எரியூட்டினார்.
அதன் பின்பு சிருங்கேரிக்கு திரும்பிய சங்கரர் தன்னைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்தவாறு இந்திய தேசத்தின் கிழக்குக் கடற்கரையோரமாக தல யாத்திரை மேற்கொண்டார். பூரியில் கோவர்தன மடத்தை நிறுவினார். பின்னர் துவாரகைக்குச் சென்று அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.
மண்டன மிஸ்ரருக்கு “சுரேஷ்வராச்சார்யா” என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரி மடத்திற்கு பீடாதிபதியாக்கியது போல் பிற சீடர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகாசார்யா என்ற மூவருக்கும் முறையே ஜகன்னாத மடம், துவாரகாமடம், ஜோஷியோ மடம் ஆகியவற்றின் பீடாதிபதிகளாக நியமித்தார்.
சங்கரரின் சந்நியாச தர்மத்தைப் பின்பற்றியவர்களில் முக்கியமான பத்து பிரிவுகளை ஏற்படுத்தினார். அவர்கள் தம் ஆசிரமப் பெயரின் பின்னால் சரஸ்வதி, பாரதி, புரி (சிருங்கேரி மடம்), தீர்த்தர், ஆசிரம (துவாரகா மடம்), கிரி, பர்வத, சாகர் (ஜோஷி மடம்), வன, ஆரண்ய (கோவர்தன மடம்) என்று இணைத்துக் கொள்ளுமாறு செய்து “தசநாமி சந்நியாசிகள்” என்ற அமைப்பையும் உருவாக்கினார். இவர்களில் ஆழமான வேதாத்தியானமும், தியானமும் செய்து தன்னை உணர்ந்தவர்கள் பரமஹம்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.
“சிவானந்த லஹரி” பாடி தம் பக்திப் பரவசத்தை அமுத தாரை வடிவில் உலகிற்கு வழங்கிய சங்கரர், உஜ்ஜயினிக்குச் சென்று மனிதர்களைக் கொன்று குவித்த பைரவர்களை வென்றார். காஞ்சிபுரத்திற்குச் சென்று சாக்தர்களை வென்று கோவில்களைப் புனிதப்படுத்தினார். திருவிடைமருதூருக்குச் சென்று அங்குள்ள ஈசன் கோவிலில் தம் சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் மீது “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்” பாடி யந்திரங்களை கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்து கோவிலை கணக்கற்ற பக்தர்கள் தேடி வருமாறு செய்தார்.
கொல்லூரில் மூகாம்பிகை கோவிலுக்கு சங்கரர் செல்கையில், காது கேட்காத, பேச முடியாத ஒரு அறிவு மிக்க அந்தணச் சிறுவனுக்கு நெல்லிக்கனி கொடுத்து ‘ஹஸ்தாமலகன்’ என்று பெயரிட்டு தன்னுடைய முக்கியச் சீடர்களில் ஒருவராக்கிக் கொண்டார். கிரி என்ற சிறுவனை மந்தப் புத்தியுள்ளவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க அவனை “தோடகாஷ்டகத்தை” சொல்ல வைத்து “தோடகர்” என்று பெயரிட்டார்.
இவர் எழுதிய “சரீரிக் பாஷ்யா”, “சனட் சுஜாத்தியா”, “சஹஸ்ரநாம அத்யாயா”, “விவேக சூடாமணி”, “ஆத்ம போதா”, “அபரோக்ஷ அநுபூதி”, “ஆனந்த லஹரி”, “ஆத்ம அனாத்ம விவேக”, “த்ருக் த்ருஷ்ய விவேக”, “பஜகோவிந்தம்”, “உபதேச சஹஸ்ர” போன்ற பல நூல்கள் இன்றும் இந்து சமய ஆன்மிக ஈடுபாடுடைய பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.
இப்படி சங்கரரின் அற்புதங்கள் எத்தனையோ உண்டு. இந்தியா முழ்வதும் யாத்திரை சென்று பல அற்புதங்கள் நிகழ்த்திய மகான் சங்கரர் கடைசியாக இமயமலையை நோக்கிச் சென்று பத்ரியில் ஒரு கோவிலைக் கட்டினார். அங்கிருந்து உயர்ந்த இடத்தில் இருந்த கேதார்நாத்தில் ஒரு குகைக்குள் சென்ற சங்கரர் தன்னுடைய முப்பத்திரண்டாம் வயதில் ஈசனுடன் கலந்தார். முப்பத்திரண்டு வயதிற்குள் முக்தியடைந்த அவர் இன்றும் இந்து சமயத்தவர் பலராலும் நினைவில் கொள்ளப்படுகிறார்.
மத்துவர்
தேனி. எம். சுப்பிரமணி
கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்ப்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்ததுடன் தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதிய மகான் மத்துவர். “விஷ்ணுவை வழிபடுவதே உண்மையில் பரம்பொருளின் வழிபாடு” என முதன்முறையாக அறிவித்ததுடன் இதற்காக “துவைதம்” எனும் தனிக் கொள்கையை வலியுறுத்திய மகான் மத்துவர். இவர் ராமாயண காலத்தில் வாயு குமாரனாகவும், மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தார் என்றும் சொல்வார்கள். இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்வோமா? கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் ஊருக்கருகிலுள்ள பாஜகம் கிராமத்தில் மத்தியகேஹர் எனும் அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குச் சொந்தமாக இருந்த சிறிது நிலத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் வாழக்கை நடத்தி வந்தார். அவர் அந்தப் பகுதியில் புலமை மிக்க அறிஞராக இருந்ததால் அவரை அங்கிருந்த மக்கள் “பட்டர்” என அழைத்தனர். இவருடைய மனைவி வேதவதி. அத்தம்பதியர்களுக்கு ஒரு பெண்ணும் இரு பிள்ளைகளும் பிறந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக இரு பிள்ளைகளும் இளம்வயதிலேயே இறந்து போய் விட்டனர். இதனால் மனம் வருந்திய அத்தம்பதியர்கள் தங்களுக்குப் பின் வாரிசு இல்லையே என்று கவலைப்பட்டனர். இதனால் அத்தம்பதியர்கள் தங்களுக்குப் பிள்ளை அளிக்க வேண்டி, அருகிலுள்ள உடுப்பி கோயிலுக்குச் சென்று தினமும் வழிபட்டு வந்தனர். அவர்களின் பன்னிரண்டு ஆண்டு வேண்டுதலின் பலனாக அவர்களுக்கு 1238 ஆம் ஆண்டு விஜயதசமியன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அவர்கள் “வாசுதேவன்” என்று பெயரிட்டனர். வாசுதேவன் குழந்தையாயிருக்கும் போதே துடிப்புடனும் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவனாகவும் இருந்தான். அவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது ஒருநாள் வீட்டிலிருந்து அவன் காணாமற் போய் விட்டான். அவன் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு வாசுதேவன் உடுப்பி கோயிலில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. பெற்றோர் உடுப்பி கோயிலுக்கு விரைந்தனர். அங்கே அனந்தேசுவரர் சன்னதி முன்பு பக்தர்களின் கூட்டம் நிறைந்து இருந்தது. சாஸ்திர விதிப்படி திருமாலுக்கு எப்படி பூசை செய்ய வேண்டும் என்று சிறுவன் வாசுதேவன் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்த பலரும் வாசுதேவன் சாதாரணக் குழந்தையல்ல, தெய்வக் குழந்தை என்றனர். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ, கடனைத் திருப்பி கொடுக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்தான். அப்போது ஆறு வயதேயான குழந்தை வாசுதேவன் வேகமாக சமையலறைக்குச் சென்று, அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை அள்ளிக் கொண்டு வந்து, “உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள்” என்று கடன்காரன் கையில் கொடுத்தான். அவன் கொடுத்த புளியங்கொட்டைகள் அனைத்தும் தங்கக் காசுகளாக மாறியிருந்தன. கடன் கொடுத்தவன் அதை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பிப் போனான். வாசுதேவனுக்கு ஏழு வயதான போது உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் விளையாட்டு, மல்யுத்தம், ஓடுதல், குதித்தல், நீந்துதல் என அனைத்திலும் முதலாவதாக இருந்தான். ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான். வீர விளையாட்டுகளில் விஞ்சி நின்ற வாசுதேவன் படிப்பிலோ மிகவும் மந்தமாக இருந்தான். வாசுதேவனின் ஆசிரியர் படிப்பு சொல்லிக் கொடுக்க பல வழிகளில் முயன்றும் அது முடியாததால் கடைசியாக அவனுக்குப் படிப்பு வராது என்ற முடிவுக்கு வந்ததுடன் படிப்பிலிருந்து விலக்கி வீட்டுக்கும் அனுப்பி விட்டார். வாசுதேவனின் பெற்றோர், “மகன் இப்படி படிப்பில்லாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாமல் போய்விடுவானே..?” என்று மனம் வருந்தினர். இந்நிலையில் அந்தப் பகுதியில் கைரேகை பார்ப்பதில் புகழ் பெற்றிருந்த ஒரு பெரியவரிடம் வாசுதேவனை அழைத்துச் சென்று காண்பித்தனர். வாசுதேவனின் கைரேகைகளைப் பார்த்த அவர், “உங்கள் மகன் ஓர் அவதார புருசர். ராமாயண காலத்தில் வாயு குமாரனாகவும், மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் பீமனாகவும் இருந்த இவர், இந்தப் பிறவியில் சிறந்த ஞானியாக நாடு முழுவதும் ஒளி வீசப் போகிறார்” என்றார். அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்ட பின்பு பெற்றோர்களுக்கும் மகன் மேல் புதிய நம்பிக்கை வந்தது. வீட்டில் வாசுதேவனுக்கு அவனது தந்தையே கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அதன் பிறகு வாசுதேவன் ஓரளவு படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினான். பின்னர் தாமாகவே கல்வி கற்க ஆரம்பித்தான். வேதங்கள், சாஸ்திரங்கள் என அனைத்தையும் கற்றுத் தெரிந்து கொண்டான். வாசுதேவன் வேத பாடங்களைப் படித்த பிறகு, பதினைந்தாவது வயதில் வேதங்கள், வேதங்களின் அங்கங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த பின்பு துறவியாக வேண்டும் என்று விரும்பினார். துறவியாவதற்கு ஒரு குருவிடம் தீட்சை பெறுவது அவசியம் என்பதால் தனக்காக ஒரு குருவைத் தேட ஆரம்பித்தார். உடுப்பியிலிருந்த மடத்தின் தலைவராக இருந்த அச்சுதப்பிரக்ஞர் எனும் துறவியைச் சந்தித்தார். அவரிடம், தான் துறவியாக விரும்புவதால் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அச்சுதப்பிரக்ஞர், வாசுதேவனை சீடராக ஏற்றுக் கொண்டாலும், துறவியாவதற்கு பெற்றோரின் அனுமதியைப் பெற்று வர வேண்டும் என்கிற நிபந்தனையை விதித்தார். வாசுதேவன் பெற்றோரிடம் தான் துறவியாக விரும்புவதைத் தெரிவித்தார். அதற்கு அவர் பெற்றோர் சம்மதிக்கவில்லை. “நாங்கள் மறைந்த பிறகு உத்தரக் கிரியைகள் செய்ய எங்களுக்கு வேறு மகன்களும் இல்லை. அக்கிரியைகள் செய்யாமல் போனால் எங்களுக்கு நற்கதி கிடைக்காதே” என்று சொல்லி அவர் துறவியாவதைத் தடுத்தனர். உடனே வாசுதேவன், “உங்களுக்கு கடைசிக் காலத்திலும், மரணத்திற்குப் பின்பும் செய்ய வேண்டிய கிரியைகள் செய்ய அடுத்த ஆண்டே தங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அதன் பிறகு நான் சந்நியாசம் மேற்கொள்கிறேன்” என்று பெற்றோரிடம் சொன்னார். அவர் சொன்னபடியே அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வாசுதேவனுக்கு சந்நியாசத்திற்கு பெற்றோரின் அனுமதியும் கிடைத்தது. வாசுதேவன் குருவிடம் சென்று, சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டார். அங்கு அவருக்கு பூரணபிரக்ஞர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பெயருக்குப் “பூரண அறிவினை உடையவர்” என்று பொருள். குருவான அச்சுதப்பிரக்ஞர் வேதபாடங்களில் கரை கண்ட பண்டிதர். பூரணபிரக்ஞர் வேதங்கள், வேதங்களின் அங்கங்கள், சாஸ்திரங்களில் மேலும் கூடுதல் அறிவு பெற்றார். வேதாந்தத்தைப் படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு அவருக்கும் குருவுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது. இதனால் அடிக்கடி குருவுடன் வாதங்கள் செய்யத் தொடங்கினார். இதனால் சிறிது சிறிதாகப் பூரணபிரக்ஞரிடன் அறிவுத்திறன் ஆசிரமத்தை விட்டு வெளியிலும் தெரியத் தொடங்கியது. பூரணபிரக்ஞரின் தகுதி, ஞானம் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் தன் சீடரின் கருத்துக்களை ஒப்புக் கொள்ளாத அவரின் குரு அச்சுதப்பிரக்ஞர், பூரணபிரக்ஞர் எந்தவொரு விசயத்தையும் அணுகும் விதத்திலிருந்த புதுமையையும், அவர் வாதங்களில் இருந்த அசைக்க முடியாத உண்மை உண்டு என்பதையும் உணர்ந்து கொண்டு அவரையே மடத்தின் தலைவராக நியமித்தார். இவ்வாறு அனந்தேசுவரர் கோவில் பீடத்தின் தலைமைப் பதவியில் பூரணபிரக்ஞர் அமர்ந்த பிறகு அவருடைய குரு அவரின் மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு ஆனந்த தீர்த்தர் என்கிற பெயரிட்டார். இதை மத்துவர் என்றும் மத்துவாச்சாரியார் என்றும் மக்கள் போற்றிப் புகழத் தொடங்கினார். மத்துவருக்கு ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கை சரியானதாகத் தோன்றவில்லை. எனவே சங்கரரின் சீடர்கள் மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதாகப்பட்டதால் நாடு முழுவதும் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தம்முடைய கருத்துக்களைக் கூறுவது என மத்துவர் முடிவு செய்தார். இதன்படி மத்துவர் தனது குருவான அச்சுதப்பிரக்ஞர் மற்றும் சில சீடர்களுடன் தென்னிந்தியாவிலிருந்த சில ராஜ்யங்களுக்கு யாத்திரை செல்லத் தொடங்கினார். அந்தக் காலத்தில் தென்னிந்தியாவில் பல சிறு அரசுகள் செயல்பட்டு வந்தன. அவை அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் அனைத்து அரசுகளிலும் பண்டிதர்களுக்கு மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்தது. சபையில் ஒரு பண்டிதரை மற்றொரு பண்டிதர் வாதத்தில் வென்றுவிட்டால் அப்பண்டிதரின் வழக்கங்களையும், கொள்கைகளையும் அந்த அரசின் அரசனும் மக்களும் ஏற்றுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மத்துவர் முதலில் மங்களூருக்குச் சென்றார். அங்கு தம்மை வாதத்தில் எதிர்த்தவர்களை எல்லாம் மிகச் சுலபமாக வென்றார். அதன் பிறகு திருவாங்கூர் சென்றார். அந்த சமயத்தில் சிருங்கேரி மடத்தின் தலைவராக இருந்த வித்யாசங்கரரும் திருவாங்கூர் வந்திருந்தார். திருவாங்கூர் அரசவையில் இருவருக்குமிடையே நடந்த விவாதத்தில் மத்துவர் வெற்றி பெற்றார். இப்படியே தென்னிந்தியாவிலிருந்த பல அரசவைகளில் வெற்றி பெற்ற அவரின் புகழ் பரவத் தொடங்கியது. அதே சமயம் தோல்வியடைந்த சங்கரரின் சீடர்கள் மட்டும் அவர் மீது வெறுப்பு கொண்டனர். மத்துவரையும் அவரது சீடர்களையும் துன்புறுத்தத் தொடங்கினர். இதற்காக மத்துவர் கலங்கவில்லை. உடுப்பி திரும்பிய அவர் முதலில் பகவத்கீதைக்கு ஒரு விரிவுரை எழுதினார். பின்னர் வேதாந்த சூத்திரங்களுக்குப் பாஷியம் செய்யும் வேலையை எடுத்துக் கொண்டார். இதற்காகப் பல வருடங்கள் உடுப்பியிலேயே தங்கியிருந்த அவர் வட இந்தியாவிற்கு யாத்திரை செல்ல நினைத்தார். வட இந்தியாவில் முகம்மதியர்களின் ஆட்சியும் ஆதிக்கமும் அதிகம் இருந்தது. இதனால் முகம்மதியர்களின் அரசுப் பகுதிகளின் வழியாக செல்ல வேண்டியிருந்தது. மத்துவருக்கு உருது, பார்சி மொழிகள் தெரிந்திருந்ததால் முகம்மதியச் சிற்றரரசர்களை அவர் எளிதில் கவர்ந்து விடுவார். அதனால் முகம்மதியர்களிடமிருந்து அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை. வட இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று விட்டுக் கடைசியாக ஹரித்துவாரம் போனார். அங்கே பல நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார். சில நாட்கள் இமயமலைக் குகைகளுக்குச் சென்று அங்கே தனியாகவும் இருந்தார். அதன் பின்பு மறுபடியும் ஹரித்துவாரம் திரும்பி வந்தார். திரும்பிய அவர் “விஷ்ணுவை வழிபடுவதே உண்மையில் பரம்பொருளின் வழிபாடு” என முதன்முறையாக அறிவித்தார். அங்கு வேதாந்த சூத்திரங்களுக்குத் தான் எழுதிய பாஷியத்தையும் வெளியிட்டார். இதன் பிறகு ஹரித்துவாரத்திலிருந்து மீண்டும் தன் யாத்திரையைத் தொடங்கினார். அப்படிச் செல்லுமிடங்களில் பகவான் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லி வைணவ மதத்தில் இணைந்து விஷ்ணுவை வழிபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வட இந்தியாவிலிருந்து திரும்பும் வழியில் சாளுக்கியர் ஆட்சிப்பகுதியின் தலைநகராக இருந்த கல்யாண் எனுமிடத்தில் மத்வர் தங்கினார். அங்கு பல பண்டிதர்கள் வசித்தனர். அவர்களில் சோபணபட்டர் என்பவருடன் வாதம் புரிந்தார். இதில் சோபணபட்டர் மத்வரிடம் தோற்றுப் போனார். இதனால் அவரும் அவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் வைணவர்களாகி விட்டனர். இதன் பிறகு கல்யாணில் ஒரு மடத்தை நிறுவி அந்த மடத்தின் தலைவராக சோபணபட்டரை நியமித்து ஊர் திரும்பினார். உடுப்பி திரும்பியதும் குரு அச்சுதப்பிரக்ஞருக்கும் வைஷ்ணவ தீட்சை அளித்து அவரையும் சீடராக்கிக் கொண்டார். அக்காலத்தில் சிவன் மற்றும் சக்தி கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதை மத்துவர் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார். உடுப்பிக்கு அருகில்தான் சங்கரரின் சிருங்கேரி மடம் இருந்தது. இம்மடத்தின் தலைவராக இருந்த பத்மதீர்த்தர் என்பவருக்கு தென்னாட்டு அரசர்களில் பலர் சீடர்களாக இருந்தனர். எனவே அரசர்களின் துணையுடன் மத்துவருக்கும் அவரது சீடர்களுக்கும் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. பத்மதீர்த்தரின் சீடர்கள் சிலர் மத்துவரின் குடிசையில் இருந்த பல நூல்களை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் மண்ணிற்குள் புதைத்து விட்டனர். மத்துவர் இது குறித்து கும்பலா நாட்டின் அரசன் ஜெயசிம்ஹ சாளுக்கியனிடம் தெரிவித்ததுடன், தனது நூல்களையும் மீட்டுத்தர வேண்டினார். அரசனும் தன் படைவீரர்களை அனுப்பி அவருடைய நூல்களைத் திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் ஒளித்து வைத்திருந்த மத்துவரின் நூல்களைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுக்கச் செய்தார். மத்துவரின் வாதத்தில் தோற்கடிக்கப்பட்டு அவருடைய வழக்கத்துக்கு மாற்றப்பட்டவர்களில் திரிவிக்கிரமபண்டிதர் என்பவரும் ஒருவர். திரிவிக்கிரமபாண்டியர் பல பகுதிகளில் பெயர் பெற்றிருந்தவர். அவர் வைணவரானதை அறிந்து பலரும் வைணவர்களாக மாறினர். ஜெயசிம்ஹனின் கும்பலா அரசுப் பகுதிகளில் மத்துவர் யாத்திரை செய்து கொண்டிருந்த போது அவருடைய தாய், தந்தையர் காலமாகினர். அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே மகன் புகழ் பரவியது கண்டு மகிழ்ந்தனர். மத்துவர் குமாரதாரா, நேத்ரவதி என்ற ஆறுகளின் சங்கமத்தில் தம் வாழ்வின் கடைசிக் காலத்தை அமைதியுடன் கழித்தார். தன்னுடைய நேரம் அனைத்தையும் நூல்கள் எழுதுவதில் செலவிட்டார். 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்த இவர் கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவற்றுள் அவர் எழுதிய மத்துவபாஷியம், உபநிசத் விளக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கிருந்தவாறே தன் சீடர்கள் பலரையும் வைணவக் கொள்கைகளைப் பரப்பவும், பிற சமயப் பண்டிதர்களுடன் வாக்குவாதம் செய்யவும் அனுப்பி வைத்தார். அவர்களும் மத்துவர் கொள்கையை பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்கள் மூலம் பரப்பினர். மத்துவர் பத்மநாபதீர்த்தர் என்கிற முக்கியச் சீடரை இப்பணிகளுக்குத் தலைவராகவும் நியமித்தார். மத்துவர் உருவாக்கிய உடுப்பி கிருஷ்ணன் கோயிலை நிர்வகிப்பதற்கென்று எட்டு சீடர்கள் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தார். மத்துவரால் உருவாக்கப்பட்ட இந்த உடுப்பி கிருஷ்ணன் கோயிலிலுள்ள கிருஷ்ணன் சிலை, அந்தக் கோயிலுக்கு எப்படி வந்தது என்பது குறித்து இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று கிருஷ்ணர் சிலை உருவான கதை. இன்னொன்று இந்த சிலை மத்துவரிடம் வந்து சேர்ந்த கதை. முதலில் சிலை உருவான கதையைப் படிப்போமா? தேவகி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் யசோதை மகனாய் வளர்ந்தவர் கிருஷ்ணர். கிருஷ்ணனின் பாலபருவத்தை, தான் அனுபவிக்கவில்லை என்னும் வருத்தம் தேவகிக்கு இருந்தது. ஒரு முறை கிருஷ்ணரிடம் இதைத் தெரிவித்ததும் கிருஷ்ணரும் தனது பாலலீலைகளை தாய்க்கு நடத்திக் காட்டினாராம். தேவகியோடு ருக்மணியும் இதைக் கண்டு களித்தாள். உடனே ருக்மணிதேவி, “ப்ரபோ! தங்களின் குழ்ந்தை வடிவமும் லீலைகளும் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அந்த பாலகிருஷ்ணர் மனதில் பதிந்து விட்டது. எனக்கு அந்த வடிவம் விக்கிரகமாக வேண்டும். விக்கிரகத்தை எனது பூஜை அறையில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன் அதைத் தாங்கள் உருவாக்கித் தரவேண்டும்” என்று கிருஷ்ணரிடம் வேண்டினாள் கிருஷ்ணன் உடனே தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார். பாலகிருஷ்ண உருவத்தில் சாளகிராம சிலை வடிவம் அமைத்துத் தரச் சொன்னார். அவர் வடித்த சாளகிராம சிலையை ருக்மணிதேவி தினமும் பூஜித்து வந்தாள். கிருஷ்ணர் தனது இறுதிக் காலம்வரை பழைய துவாரகையில் வசித்து, பின்னர் கிருஷ்ணரின் சங்கல்பத்தால் பழைய துவாரகை நீரில் மூழ்கிய போது ருக்மணி பூஜை செய்து வந்த கிருஷ்ண சிலையும் மூழ்கிப் போய்விட்டது. இந்தச்சிலை கோபி என்று சொல்லப்படும் ஒருவித களிமண்ணால் முழுவதும் மூடப்பட்டு காலப் போக்கில் பாறை போல இறுகி சமுத்திரக் கரையில் ஒதுங்கிக் கிடந்தது. பல நூற்றாண்டுகள் கழித்து கப்பலோட்டி ஒருவனுக்கு இந்தப்பாறை கண்ணில் பட்டது. தனது கப்பலில் பாரத்தை சமநிலையில் வைக்க அதை உபயோகப்படுத்தி வந்தான். இனி இந்த சிலை மத்துவர் கைக்கு எப்படி வந்து சேர்ந்தது? என்பது குறித்த இரண்டாவது கதையைப் படிப்போமா? மத்துவர் ஒருநாள் தனியாக உடுப்பிக்கு அருகிலுள்ள பண்டேஸ்வரா கடற்கரையோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அங்கு கடலில் ஒரு கப்பல் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அது மால்பே என்னும் இடத்தினை கடக்கும் சமயம் பெரும் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்டது. அந்தச் சூறாவளிக் காற்றில் கப்பலே மூழ்கிவிடும் என்ற நிலையில் இருந்தது. இதைப் பார்த்த மத்துவர் அந்தக் கடும்புயலைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு விஷ்ணுவை வேண்டியபடி, தனது மேல் அங்கவஸ்த்திரத்தை எடுத்துக் கப்பல் இருக்கும் திசை நோக்கி வீசினார். என்ன ஆச்சர்யம்! வேகமாக விசீக் கொண்டிருந்த அந்தப்புயல் வெள்ளை அங்கவஸ்திரத்தைக் கண்டதும் சட்டென ஓய்ந்து அடங்கியது. புயலில் மூழ்க இருந்த அந்தக் கப்பல் கரைக்கு வந்து ஒதுங்கியது. அந்தக் கப்பலோட்டிய மாலுமி கரைக்கு ஒடி வந்து மத்வாச்சாரியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான். “ஐயா! உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? இந்தப் புயலால் வந்த பெரும் ஆபத்திலிருந்து எங்களையும் கப்பலையும் காப்பாறி விட்டீர்கள். ஐயா இதற்கு அன்பளிப்பாக இந்தக் கப்பலிலுள்ள எந்தப் பொருட்களையும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றான். மத்வர் புன்னகை தவழ தனக்கு எந்தப் பொருளும் வேண்டாமென்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் அந்தக் கப்பலில் இருந்த அந்த கோபிப் பாறையை நோக்கினார். அவருக்கு அந்தப் பாறைக்குள் மறைந்திருந்த கிருஷ்ணர் சிலை ஒன்றும் தெரிந்தது. கப்பலோட்டும் மாலுமியிடம் அந்தப் பாறையை மட்டும் கொடுக்கும்படி கேட்டார். கப்பல் மாலுமி, “கப்பலில் எவ்வளவு விலையுயர்ந்த பொருட்களெல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் வேண்டாமென்று சொன்னவர் கப்பலின் கீழ் பாரத்தைச் சமப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய பாறையைப் போய்க் கேட்கிறாரே…” என்று வியப்புடன் பார்த்தபடி அந்தப் பாறையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். அந்தப் பாறையை மிகவும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு அதைத் தன் தலையில் வைத்துச் சுமந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் பாடியபடி உடுப்பி நோக்கி நடந்து சென்றார். அந்த சமயம் அவர் பக்திப் பரவசத்தில் பாடிய பாடல்கள், தற்போது “த்வாத்சஸ ஸ்தோத்திரம்” என்று வழங்கப்படுகிறது. கப்பலோட்டிய மாலுமியிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்த அந்த வெள்ளை மண்பாறையைத் திருக்குளத்தில் நீராட்டிய போது, கிருஷ்ணரின் சாளக்கிராம சிலை வெளிப்பட மத்வர் பரவசத்துடன் விழுந்து வணங்கினார். அந்தத் திருக்குளம் தற்போது “மத்வசரோவர்” என்று பெயர் பெற்றது. அந்தக் குளத்தின் தீர்த்தம் தான் தற்போதும் உடுப்பி கிருஷ்ண பகவானின் ஆராதனைக்கும், அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சிலைக்கு நீராட்டியதும் அது மேலும் ஸாந்நித்யம் பெற்று பிரகாசித்தது. உடனே முறைப்படி கிருஷ்ணமடத்தில் பிரதிஷ்டை செய்தார். அதுதான் தற்போது உடுப்பி கிருஷ்ணன் கோயில் என்று புகழ் பெற்று விளங்குகிறது. மத்துவர் கொள்கைப்படி கடவுள், ஜீவன், ஜடப்பொருள் என்ற மூன்றும் ஆதி அந்தமற்றவை. ஜடப்பொருட்களும், ஜீவனும் கடவுளிலிருந்து வேறுபட்டவை. ஜீவன்கள் எல்லையற்றவை. தங்களுக்குள் பல வித்தியாசம் கொண்டவை. ஜீவனுக்கும், பரமாத்மாவுக்குமுள்ள தொடர்பு முதலாளி, தொழிலாளிக்குமுள்ள தொடர்பைப் போன்றது. விஷ்ணுவை வழிபடுவதால் கடவுளின் குணங்கள் மனிதனுக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் கடவுளுக்கு இணையாக ஆக முடியாது. இது போன்ற மத்துவரின் கொள்கைகள் ஒரு மத வழக்கமாகவே உருவாயின. இவர் கொள்கை அனைத்தும் துவைதம் எனப்படுகின்றன. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மலர்களாக விழுந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவானது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் நேரடியாகப் பார்த்தனர். அவருடைய சீடர்கள் சிறிது நேரத்திற்குப் பின்பு மலர்களை விலக்கிப் பார்த்தனர். அங்கு மத்துவரை காணவில்லை. அவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது |
குருநானக்
தேனி. எம். சுப்பிரமணி
அந்தக்காலத்தில் மக்களிடம் அதிகமாக இருந்த தீண்டாமை, மூடநம்பிக்கை போன்றவற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் மனிதனாகப் பிறந்தவர்கள் சாதி, மதம் எனும் பெயரில் பிரிந்து விடாமல் மக்கள் எனும் ஒரே நிலையில் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உபதேசித்ததுடன், மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும், அவர்களுக்குள் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து, ஆனந்தம், சாந்தி என்கிற தம் உபதேசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்த ஒரு அற்புத மகான் குருநானக். 1469 ஆம் ஆண்டு (ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் என்றும், அக்டோபர் 20 ஆம் நாள் என்றும் இரு வேறு நாட்கள் குறிப்பிடப்படுகின்றன.) பாகிஸ்தானில் லாகூருக்கு அருகில் 35 மைல் தொலைவிலுள்ள ராயி கோயி தல்வந்தி (தற்போது நான்கானா சாஹிப் என பெயர் மாற்றமடைந்துள்ளது. எனும் கிராமத்தில் “சத்சிரி” எனும் சாதியைச் சேர்ந்த மேத்தா காலு – திருப்தா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் நானக். இவர் சிறு குழந்தையாக இருந்த போதே தன் வயதுச் சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, “நீங்கள் புது விளையாட்டு விளையாட விரும்பினால் என்னைப் போல் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி மனத்துக்குள் “சத்திய கர்த்தர்” என்று சொல்லிக் கொண்டே இருங்கள். உங்களுக்கு வேண்டியது கிடைக்கும்” என்பார். அந்த அளவுக்கு அவருக்குச் சிறு வயதிலேயே கடவுள் பக்தி அதிகமாக இருந்தது. கிராம மணியக்காரராக இருந்த நானக்கின் தந்தை மேத்தா காலு, நானக்குக்கு ஏழு வயதான போது அவரை கோபால பண்டிதர் என்பவரிடம் கல்வி கற்க அழைத்துச் சென்றார். கோபால பண்டிதர் நானக்கை தன்னருகில் அமர வைத்துப் படிக்கச் சொன்னார். நானக் அவரிடம், “நீங்கள் எனக்கு என்ன சொல்லித் தருவீர்கள்?’ என்று கேட்டார். அவர், “கடைக் கணக்கு வழக்கு, கணிதம் மற்றும் பலவற்றையும் கற்பிப்பேன்?” என்றார். “எனக்கு இந்தப் படிப்புகளையெல்லாம் படிக்க விருப்பமில்லை. இந்தப் படிப்புகளெல்லாம் நிலையில்லாத உலகில் அழிந்து விடக் கூடியவை. கடைசிக் காலத்தில் கூட வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய கல்வியையே நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் நானக். வாழ்க்கைக்கு உதவும் படிப்புகள் என்று அவர் சொல்லித் தரும் படிப்புகள் கடைசிக் காலத்தில் பயன்படாது என்று சிறுவனான நானக் சொன்னதைக் கேட்டு கோபால பண்டிதர் திகைத்துப் போனார். இந்தச் சிறு வயதில் கடைசிக் காலம் வரை சிந்தித்த அவருடைய திறன் கண்டு வியந்தும் போனார். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவருக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து வந்தார். நானக் அந்தப் பாடங்களைக் கேட்டுக் கொண்டாலும் அதைக் கற்றுக் கொள்வதில் விருப்பமில்லாமலே இருந்து வந்தார். இதைக் கண்ட பண்டிதர் நானக்கின் தந்தையைச் சந்தித்து, “உங்கள் மகனுக்கு இந்தக் கணக்கு வழக்குப் படிப்பில் ஆர்வமில்லை. வேறு படிப்பில் சேர்த்து விடுங்கள்” என்றார். நானக்கின் தந்தையும் தம் பையனுக்கு கணிதம், இந்திப் பாடங்களில் நாட்டமில்லை எனக் கண்டதும் சமஸ்கிருதம் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக விரஜ்லால் பண்டிதர் என்பவரிடம் சேர்த்து விட்டார். விரஜ்லால் பண்டிதர் சிறுவனான நானக்கின் அறிவைக் கண்டு வியந்து போனார். ஒரு முறை பண்டிதர் “ஓம்” என்று எழுதிச் சொல்லித் தந்தார். அங்கிருந்த மாணவர்கள் பண்டிதர் சொன்னதைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் நானக் மட்டும் அப்படியிருக்கவில்லை. “ஓம் என்பதற்குப் பொருள் என்ன?” என்று கேட்டார். பண்டிதர், “நான் சொல்வதை மட்டும் நீ கேட்டுத் தெரிந்து கொள். அதற்கு உனக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் அதன் பொருளைச் சொல்லித் தர மாட்டேன்” என்றார். உடனே நானக், “பொருள் தெரியாமல் என்ன படித்தும் என்ன பயன்? நான் உங்களுக்கு ஓம் என்பதன் பிரணவப் பொருளை விளக்கிச் சொல்கிறேன்” என்று கூறியபடி அதற்கான பொருளை விளக்கினார். பண்டிதர் அசந்து போனார். அதன் பிறகு பண்டிதர் நானக்கின் தந்தையைச் சந்தித்து, “உங்கள் மகனுக்கு நான் பாடம் கற்றுக் கொடுக்க முடியாது. இனி என்னிடம் பாடம் கற்றுக் கொள்ள அனுப்ப வேண்டாம்” என்று சொல்லி விட்டார். நானக்கின் தந்தை தன் மகனை என்ன செய்வது? என்று குழம்பிப் போனார். அடுத்து பார்ஸி மொழியாவது கற்றுக் கொள்ளட்டும் என்று குதுபுதீன் மௌலவி என்பவரிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். நானக் அந்தப் படிப்பிலும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நானக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத குதுபுதீன் மௌலவி, நானக்கிற்கு கற்றுக் கொடுக்க முடியாது என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். நானக்கின் தந்தை இனி அவரைப் படிக்க அனுப்புவது வீண் என்று உணர்ந்தார். தன் வீட்டிலிருக்கும் எருமை மாடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் சென்று மேய்த்து வரும்படி சொன்னார். நானக்கும் அதன்படி எருமை மாடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்வார். மாடுகளை மேயவிட்ட பின் அங்கு ஏதாவது மரத்தடி நிழலில் அமர்ந்து கடவுள் குறித்த தியானத்தில் அமர்ந்து விடுவார். இப்படி ஒரு நாள் அவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது, அவர் மேய்க்கக் கொண்டு சென்ற எருமை மாடுகள் ஒரு ஜாட் சாதிக்காரனின் வயலில் புகுந்து வயலின் ஒரு பகுதியை நாசம் செய்து விட்டன. அந்த வயல்காரன் கிராமத்துப் பெரிய மணியக்காரரிடம் புகார் செய்தான். அவர் நானக்கைக் கூப்பிட்டு “எருமைகளை மேயவிட்டு இவருடைய வயலை ஏன் நாசம் செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு நானக், “அழித்தவன் அவனே. அவனே இதைச் சரியும் செய்வான். இதில் நீங்களோ, நானோ ஒன்றும் செய்ய முடியாது.” என்று சொல்ல மணியகாரர் திகைத்துப் போனார். நானக்கின் தந்தையை அழைத்து வயல்காரனுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு அளிக்க உத்தரவிட்டார். நானக்கின் தந்தை வயல்காரனுக்கு இழப்பை ஈடு செய்து கொடுத்தார். நானக்கை என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தந்தை தவித்துப் போனார். நானக்கின் மேல் கோபம் கொள்ளத் தொடங்கினார். இதையறிந்த நானக்கின் சகோதரி நானக்ஜீ தன் கணவனிடம் சொல்லி, நானக்கை சுல்தான்பூருக்கு அழைத்து வந்து அங்கிருந்த தௌலத்கான் லோடி என்பவரின் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டாள். நானக்கிற்கு பதினெட்டு வயதானதும் மூலசந்திரர் என்பவருடைய பெண்ணான சுலக்சனா என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்களுக்கு ஸ்ரீ சந்திரன், லட்சுமிதாஸ் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். நானக் மளிகைக் கடையில் வேலை பார்த்த போது, யாராவது பணமில்லை என்று சொன்னாலும் பொருளைக் கொடுத்து அனுப்பி விடுவார். “பணம் இல்லை என்பதற்காக அவருக்கு வேண்டிய பொருட்களைக் கொடுக்காமல் இருக்கலாமா?” என்று கேட்பார். இதனால் அவருடைய சம்பளத்தில் இலவசமாகக் கொடுக்கும் பொருள்களுக்குப் பணப்பிடித்தம் செய்யப்பட்டு குறைவான சம்பளமே கிடைத்து வந்தது. ஒரு சமயம் நானக் ஒருவருக்கு கோதுமை மாவு நிறுத்துக் கொண்டிருந்தார். இப்படி நிறுத்துக் கொண்டிருந்த போது, ஒரு சேர், இரண்டு சேர் என்று எண்ணிக் கொண்டே வந்தார். இப்படியே பன்னிரண்டுக்குப் பிறகு பதின்மூன்று என்ற இடத்தில் “தேரா” என்று சொல்லியபடி சிந்தித்தார். தேரா என்பதற்கு பதின்மூன்று என்றும், உன்னுடையது என்றும் இரு பொருள் உண்டு. “இவ்வுலகில் என்னுடையது என்ன இருக்கிறது? எல்லாம் உன்னுடையதுதான்“ என்று கூறி மொத்த மாவையும் அம்மனிதனுக்கே கொடுத்து அனுப்பி விட்டார். இதனால் அந்த மளிகைக் கடை வேலையிலிருந்து நானக் விலக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தம் வாழ்நாள் முழுவதும் மக்களிடையே இருந்த பகைமை, ஆசை, வெறுப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்கு முழு மூச்சுடன் முயற்சி செய்தார். இந்துக்களானாலும் சரி, இசுலாமியர்களானாலும் சரி அனைவரும் பரமபிதாவான இறைவனின் சேவகர்களே. உலகில் கெட்டவனே கிடையாது. ஒவ்வொரு மனிதனும் பிறர் குற்றத்தைக் காண்பதை விட்டுவிட்டு, முதலில் தம் குற்றத்தைக் காண வேண்டும். பின்னர் அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மனித வாழ்க்கை முழுமையடையும்” என்று பிறருக்குச் சேவை செய்யும் நோக்குடன் தன் ஆன்மிகப் பணியைப் புதிய வழியில் தொடங்கினார். நானக் ஒரு சமூக சீர்திருத்தக் கருத்துடையவர். அந்தக்காலத்தில் மக்களிடம் அதிகமாக இருந்த தீண்டாமை, மூடநம்பிக்கை போன்றவற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் மனிதனாகப் பிறந்தவர்கள் சாதி, மதம் எனும் பெயரில் பிரிந்துவிடாமல் மக்கள் எனும் ஒரே நிலையில் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உபதேசித்தார். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும், அவர்களுக்குள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். ஆனந்தம், சாந்தி என்கிற தம் உபதேசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தார். இவர் முதன்முதலில் ஜமனாபாத் என்ற ஊரிலிருந்த லாலோ எனும் தச்சன் வீட்டில் தங்கினார். அங்கிருந்து டில்லி, கயா, காசி, ஹரித்துவார், பூரி முதலிய இடங்களுக்குச் சென்றார். பின் அவர் தென்னிந்தியாவில் இராமேசுவரம், அற்புதகிரி மற்றும் இலங்கை முதலிய இடங்களுக்குச் சென்று மதப் பிரச்சாரம் செய்தார். தெற்கிலிருந்து திரும்பி கத்வால், ஹேமகூடம், திஹரி, சர்மௌர், கோரக்பூர், சிக்கிம், பூடான், திபெத் ஆகிய இடங்களுக்குச் சென்று மதப் பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு நானக் பலுசிஸ்தான் வழியாக மெக்கா சென்றார். இந்த யாத்திரையில் ஈரான், கந்தகார், காபூல், பாக்தாத் முதலிய இடங்களில் “ஸத்ய நாம்” உபதேசங்கள் செய்தார். “உலகில் எல்லாச் செயல்களும் இறைவன் விருப்பப்படி நடக்கின்றன. எனவே சண்டை, சச்சரவு, உயர்வு – தாழ்வு வேற்றுமைகளை விட்டு உண்மையான மனத்துடன் இறைவனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். எம்மனிதன் அருள், அறம், அன்பு, உண்மை உடையவனாகத் திகழ்கிறானோ அவனே வாழ்க்கையில் இன்பம் பெறுகிறான்” என்று குருநானக் உபதேசம் செய்தார். நானக்கின் உபதேசம் எல்லா மதத்தவர்களையும் கவர்ந்தது. திபெத்தியர்கள் குருநானக்ஜியைப் புத்தராகவே பார்த்தனர். “குரு கோம்ப்கா மஹராஜ்” என்று அவரை அழைத்தனர். இப்படி அவர் பயணித்த இடங்களில் சில அற்புதங்களையும் அவர் நிகழ்த்தியிருக்கிறார். ஒரு சமயம், சிக்கிம் என்ற இடத்தில் இருக்கும் மக்கள் இவரிடம், அங்கு இருக்கும் நதி எப்போதுமே உறைந்து போய் இருப்பதால் அதை உபயோகிக்க முடிவதில்லை என்றும் குடிக்கக் கூட நீர் கிடைப்பதில்லை எனவும் கூறினர். நானக் அந்த நதியில் காலை வைத்தார். அந்த நதியும் அவரது பாதங்களைத் தொட்டு மகிழ்ந்து புனிதமானது. அவர் கால் விட்ட இடங்கள் எல்லாம் இன்று வரை உறையாமல் இருக்கிறதாம். அந்த இடத்தின் பெயர் “லாச்சன் கோம்பா (Lachen Gompa) எனப்படுகிறது. அங்கு இருக்கும் மக்கள் நானக்கை ‘ரிம்பொச்சே நானக்குரு’ என்று அழைக்கிறார்கள். இப்படி அவரது உபதேசத்தைக் கேட்டும், அற்புதத்தைக் கண்டும் பலரும் அவருடைய சீடர்களாகினர். அவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கிய நானக் அதன் பிறகு, குருநானக் என்று அழைக்கப்படலானார். குருநானக்கின் உபதேசம் மிகவும் வித்தியாசமானது. குருநானக் அரேபியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற போது, ஒருமுறை அவர் மெக்காவின் பக்கம் கால் நீட்டிப் படுத்தார். உடனே அங்கிருந்த இசுலாமிய மதக்குருக்களுக்குக் கோபம் வந்தது. “அல்லவின் இல்லத்தின் பக்கம் காலை வைத்துப் படுக்காதே” என்று அவர்கள் கூறினார்கள். நானக் அவர்களிடம், “ஹாஜி அவர்களே, நீங்கள் சொல்வது சரிதான். அல்லாவின் இல்லம் எந்தப் பக்கம் இல்லையென்று சொல்லுங்கள். அப்பக்கம் என் கால்களை வைக்காமல் படுத்துக் கொள்கிறேன்.” என்றார். அனைவரும் இப்பதிலைக் கேட்டுத் திகைத்தனர். எல்லா இடங்களிலும் கடவுள் உண்டு என்பதை உணர்ந்த மதகுருக்கள் எப்பக்கம் காலை வைத்துப் படுக்கச் சொல்வது என்று புரியாமல் விழித்தனர். குருநானக் உபதேசம் செய்த முறை இத்தகையது. எவ்வளவு நேரடியாக, எளிமையாக இசுலாமிய மதக் குருக்களுக்கு அவர் தம் கருத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரது உபதேசங்கள் மதக்குருக்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் மனத்திலும் நன்கு பதிந்தன. குருநானக் உபதேசங்களைக் கேட்டு பலரும், அவரது கொள்கைகளுக்கு உடன்பட்டு அவருடைய புதிய வழிமுறைக்கு வரத் தொடங்கினர். குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் மனிதனின் வாழ்க்கை முறையைச் சுருக்கமாக கூறுகிறார்: நாம் ஜபோ, கிராத் கர்னி மற்றும் வாண்ட் கே ஷாக்கோ எனும் மூன்று கடமைகள் மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை. இவற்றின் பொருளாவது தெய்வீகப் பெயரை (வாஹெகுரு) தியானம் செய்க, கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணி செய்யுங்கள் மற்றும் ஒருவர் பெற்ற பலன்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் அது. இந்து, இசுலாம், பௌத்தம், சமணம் ஆகிய எல்லா மதத்தவரின் புனிதத் தலங்களுக்கும் குருநானக் பயணம் செய்தார். அனைத்து இடங்களிலும் “சத்திய கர்த்தர்” (கடவுள்) நினைவுடன் வணங்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அனைத்து மதத்தினர்களையும் அவர் ஒன்று சேர்க்க வந்தார். இதனால் எல்லா மதத்தவரும் குருநானக்கிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். இந்தப் புனிதப் பயணத்தின் போது ஒரு நாள் இரவு, ஒரு புனித ஸ்தலத்துக்கு வந்தார். அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு புனித மடம் சென்றடைந்தார். அந்த மடத்தின் தலைவர், குருநானக்கைப் பற்றி நன்கு அறிந்தவர். ஆனால் மடத்தில் எந்த அறையும் காலியாக இல்லாததால், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் நிலையை நேரடியாக சொல்ல முடியாமல் தவித்த தலைவர் குருநானக்கிடம், பால் நிரம்பி வழியக் கூடிய நிலையில் இருந்த ஒரு கிண்ணத்தை நீட்டினார். அதன் உட்பொருளை, அதாவது மடம் நிரம்பி வழிகிறது, இடம் இல்லை என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார். மடத்தின் தலைவர், மடத்தில் தங்க இடமில்லை என்பதைத் தன்னிடம் சொல்ல முடியாமல் மறைமுகமாக சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட குருநானக் சிறிது நேரம் பால் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தார். பின்னர் தன்னிடமிருந்த மல்லிகைப்பூவிலிருந்து சில இதழ்களைக் கிள்ளி எடுத்துப் பாலின் மீது போட்டுக் கிண்ணத்தை மடத்தலைவரிடம் திரும்பவும் கொடுத்தார். மடத் தலைவரும், வழிய வழிய பால் ஊற்றப்பட்ட கிண்ணத்தில் மல்லிகை இதழ்களைப் போட்டதும் எந்த மாறுதலும் எற்படாதது போல தன்னை அங்கு அனுமதித்தால் யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்க முடியும் என்று குறிப்பால் உணர்த்தியதைப் புரிந்து கொண்டு அவரை மடத்துக்குள் அனுமதித்தார். இப்படி குருநானக்கின் உபதேசங்களும், அணுகுமுறைகளும் பலரையும் அவர் வழியில் ஈர்த்தன. அவரால் ஈர்க்கப்பட்ட பலரும் அவர்களது சீடர்களாயினர். அவருக்குப் பல சீடர்கள் இருந்த போதும், பாலா, மர்தானா என்கிற இருவர் நண்பர்களாகவும், முக்கியச் சீடர்களாகவும் இருந்தனர். அவ்விரு சீடர்களும் அவருடன் எப்போதும் இருப்பர். அவர்களைப் பற்றியும் பல கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒரு முறை குருநானக் பஞ்சாப்பில் உள்ள அப்தால் என்ற கிராமத்திற்கு யாத்திரையாகச் சென்றார். அங்கு “பாவா வலீ கந்தாரி” எனும் ஆடம்பரமிக்க சந்நியாசி ஒருவர் இருந்தார். அப்பகுதியில் தண்ணீர் ஊற்று ஒன்றுதான் இருந்தது. அதுவும் அச்சந்நியாசியின் அதிகாரத்தில் இருந்தது. குருநானக்குக்காக அவருடைய சீடர் மர்தானா பலமுறை நீர் கேட்டும் தர மறுத்தார் அச்சந்நியாசி. சீடர் மர்தானா குருநானக்கிடம் திரும்பி வந்து, அந்தச் சந்நியாசி நீர் தர மறுப்பதாகச் சொன்னார். உடனே குருநானக் தானிருந்த இடத்தினருகே தரையில் இலேசாகக் கீறினார். அந்த இடத்தில் நீரூற்று வந்தது. அங்கு தண்ணீர் நிறைய வந்தது. இதனால் அந்த சந்நியாசியின் நீரூற்று வற்றிப் போய் விட்டது. இதனால் கோபமடைந்த அந்த சந்நியாசி மலையுச்சிக்குச் சென்று ஒரு பெரிய பாறையை உருட்டி விட்டார். அதை நானக் தம் உள்ளங்கையினால் தடுத்து நிறுத்தினார். அந்த இடத்தில்தான் இன்று சீக்கிய மதத்தவர்களுக்கான சீக்கியரின் கோயில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அதனைப் “பஞ்சா சாஹிப்” என்று அழைக்கின்றனர். (இன்னும் அந்தப் பாறை கீழே விழாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. அந்தப் பாறையில் குருநானக்கின் ஐந்து விரல்கள் அப்படியே பதிந்திருக்கிறது என்கிறார்கள்) சீக்கியர்கள் உலகவாழ்க்கையைத் துறக்குமாறு அவர்களுக்குக் கூறப்படவில்லை. ஆனால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். சீக்கிய வழிபாட்டில் மிகமுக்கிய பகுதி சேவா (சேவை) என்பதாகும். இதனை அதிக அளவில் சீக்கியக் கோவில்களில் (குருத்துவாராக்களில்) காணலாம். எந்த வகையான மதம் அல்லது சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களும் இக்கோயிலுக்குள் வரவேற்கப்படுவார்கள். அங்கு அனைவருக்கும் “லங்கார்” (அனைவருக்கும் உணவு) வழங்கப்படும். இதற்கு குருநானக்கின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள். குருநானக்குக்கு 12 வயதாக இருந்த போது அவரது தந்தை அவரிடம் ஒரு சிறு தொகையை அளித்து ஏதேனும் வியாபாரம் செய்து காண்பிக்கச் சொன்னாராம். அந்தத் தொகைக்கு உணவுப் பண்டங்களை விலைக்கு வாங்கி அந்த ஊரின் ஏழை எளியவர்களுக்கு வழங்கி விட்டு, அதுவே சிறந்த வணிகம் என்று தந்தையிடம் கூறினாராம். அவர் முதலில் அப்படி உணவு வழங்கிய ஸ்தலம் “ஸச்சா ஸௌதா” (உண்மை வணிகம்) என்று அழைக்கப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்தப் பகிர்ந்துண்ணும் முறையே இன்று உலகில் உள்ள அனைத்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் லங்கர் என்கிற பெயரில் அற்புதத் தொண்டாகத் தொடர்ந்து வருகிறது. இப்படி பல இடங்களுக்கும் சென்று, மனிதர்களுக்குள் இருக்கும் சமய வேறுபாடுகளை அகற்றிடவும், புதிய வழிபாட்டு முறையை விளக்கியும் இருபத்தைந்து ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து தனது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு குருநானக் கர்தார்பூர் என்ற ஊரில் வந்து தங்கினார். அதன் பின்னர் அங்கிருந்தவாறே போதனைகள் செய்தார். கடைசியாக 1539 ஆம் ஆண்டில் (மே மாதம் 7 ஆம் தேதி என்றும், செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் என்றும், வேறு சில நாட்களையும் குறிப்பிடுகின்றனர்) குருநானக் பூதவுடலைத் துறந்து அமரரானார். அந்த சமயத்தில் அவருடைய பல சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்களில் இந்துக்களும், இசுலாமியர்களும் குருநானக் தங்கள் குரு என்றும், அவரது உடலைத் தங்கள் சமய வழக்கப்படியே இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று சண்டையிடத் தொடங்கினர். சாதி, மத வேற்றுமைகளை ஒழிக்கப் பாடுபட்ட குருநானக்கின் சீடர்கள் இவ்வாறு சண்டையிட்டது அவ்ருடைய கொள்கைகளுக்கு முரணாக இருந்தது. கடைசியில் அங்கே அவர் உடலைப் போர்த்தியிருந்த துணியினை விலக்கினார்கள். என்ன ஆச்சர்யம்! அங்கு குருநானக் உடல் இல்லை. அவர் உடல் இருந்த இடத்தில் பூக்கள்தான் இருந்தன. அந்தப் பூக்களை எடுத்துப் பகிர்ந்து கொண்டு இரு சமயத்தைச் சேர்ந்தவர்களும் அவரவர் சமய வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்தனர். சமூக மறு சீரமைப்பாளராக வாழ்ந்த குருநானக் மறைந்து விட்ட பின்பு, அவருடைய கொள்கைகள், அவருக்குப் பின்பு வந்த சீடர்கள் மூலம் விரிவுபடுத்தப்பட்டு சீக்கிய சமயம் தோன்றியது. சீக்கிய சமய வழியிலான நடைமுறைகள் 1699 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் குரு கோபிந்த்சிங் என்பவரால் முறைப்படுத்தப்பட்டது. குருநானக் மறைந்து விட்டாலும், அவரது உபதேசங்கள் இன்றும் சீக்கியர்கள் மட்டுமில்லாமல் அனைவரது மனத்திலும் பதிந்திருக்கின்றன. அவருடைய உபதேசங்கள் பல இருந்தாலும், “மனிதனாகப் பிறந்தும், யார் பிறருக்கு உபகாரம் செய்யவில்லையோ, அவருடைய பிறவி வீணே” என்ற உபதேசம் இன்றைய சமூகத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது |
ஆதிசங்கரர்
தேனி. எம். சுப்பிரமணி
இந்து மதத்தில் மட்டும் முன்பு 72 பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தாங்கள் விரும்பும் தெய்வமே முதற்கடவுள் என்கிற எண்ணம் இருந்தது. இதனால் இந்தப் பிரிவுகளிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க முயன்றதுடன் 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளைத் தவிர்த்தும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று வகைப்படுத்தியதுடன், அத்வைதம் எனும் கொள்கையை வலியுறுத்திய ஆன்மிக மகான் ஆதிசங்கரர். இந்த மகானைப் பற்றி அறிந்து கொள்வோமா?
கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும், தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர். இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறைபக்தியும் கொண்டு, பலருக்கும் வழிகாட்டியாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
சிவபெருமானும், “உங்கள் விருப்பப்படியே நற்குணமுடைய ஒரு குழந்தை உங்களுக்குப் பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை குறுகிய காலமே உயிர் வாழும். அந்தக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் மகானாகவும் இருப்பார்.” என்று சொல்லி மறைந்தார்.
சிவபெருமான் அளித்த வரத்தின்படி 788 ஆம் ஆண்டு வசந்த ருதுவில் வைசாக சுக்லபக்ஷத்தின் ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அத்தம்பதியரும் அந்தக் குழந்தைக்கு சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான “எல்லா நலனும் அளிப்பவர்” என்கிற பொருளிலான “சங்கரன்” என்கிற பெயரைச் சூட்டினர்.
சங்கரன் சிறு குழந்தையாக இருந்த போதே மிகச்சிறந்த அறிவுத் திறனுடன் விளங்கினார். சங்கரனுக்கு ஏழு வயதான போது அவர் தந்தை காலமானார். தந்தை காலமான பின்பு அவரது தாய் அவருக்கு உபநயனம் செய்வித்து அக்கால வழக்கப்படி குருகுலத்திற்கு வேதபாடங்கள் கற்றுக் கொள்ள அனுப்பினார். குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் தினமும் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அதன் பின்பு உண்பதுதான் வழக்கம்.
ஒரு முறை சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குச் சென்றார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டின் முன்பு நின்று, “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார். வீட்டிலிருந்து எந்தப் பதிலுமில்லை. பிச்சை எடுக்கும் போது மூன்றுமுறை அழைக்க சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனால் மீண்டும் இருமுறை “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார்.
பிச்சை கேட்கும் குழந்தைக் குரலைக் கேட்டு, அந்த ஏழை அந்தணனின் மனைவி வாசலுக்கு வந்து பார்த்தார். அங்கு பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சைப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார். பிச்சை கேட்கும் பாலகனைப் பார்த்த ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டாள்.
தனக்காக, கணவனுக்கென வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் நல்ல மனதுடன் பிச்சை அளித்த அந்தப் பெண்மணியின் ஏழமை நிலை கண்டு வருந்திய சங்கரர் திருமகளை வேண்டி, “கனகதாரா ஸ்தோத்திரம்” என்ற துதியை இயற்றிப் பாட ஆரம்பித்தார். அவர் பாடி முடித்ததும் அந்த வீட்டின் கூரையிலிருந்து தங்க நெல்லிக்கனிகள் பல அந்த வீடு முழுவதும் சிதறி விழுந்தன.
அன்றிலிருந்து சங்கரரின் அற்புதச் செயல்கள் தொடங்கின. முதுமை அடைந்த அவரது தாயால் ஆற்றிற்குச் செல்ல முடியவில்லை. இதைக் கண்ட அவர் தன் தாய் இருக்கும்படி ஆற்றைச் செல்ல வைக்க நினைத்தார். அதன்படி பூர்ணா நதியை அவர் தாய் இருந்த வீட்டிற்குப் பின்புறமாகச் செல்லும்படி பணித்தார். பூர்ணா நதியும் தன் போக்கை மாற்றி சங்கரர் வீட்டின் பின்புறமாகச் செல்லத் தொடங்கியது.
சங்கரரின் அற்புதச் செயல்களைப் போலவே, இளம் வயதிலேயே அவரது புலமையும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையறிந்த அத்தேசத்து மன்னர் சங்கரரை தன் அரசவையில் புலவராக்க விருப்பம் கொண்டார். ஒரு யானை மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவரை அரசவைக்கு அழைத்து வர தன் மந்திரியை அனுப்பி வைத்தார். அந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மறுத்த சங்கரர் தனக்கு “அரசவைப் பணியை விட ஆன்மிகப் பணியே விருப்பம். எனவே மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது” என்று சொல்லி மந்திரியைத் திருப்பி அனுப்பினார்.
மந்திரி மன்னரிடம் சங்கரர் சொன்ன பதிலைச் சொல்லவும், மன்னருக்கு சங்கரரை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. மறுநாள் அவர் சங்கரரைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் சங்கரரிடம் பத்தாயிரம் பொற்காசுகள் மற்றும் சில நூல்களைப் பரிசாக வழங்கினார். சங்கரர் நூல்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பொற்காசுகள் அனைத்தையும் அவரிடமே திருப்பி வழங்கினார். மன்னர் அவருடைய ஆன்மிக எண்ணத்தையும், அதற்கான செயல்பாட்டையும் பாராட்டி விடை பெற்றுச் சென்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சங்கரர் வீட்டுச் சூழலிலிருந்து வெளியேற விரும்பினார். ஆனால் சங்கரரின் தாய் வயதாகிவிட்ட நிலையில், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காக மகனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனால் சங்கரர் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் சந்நியாசத்தை விரும்புவதாகத் தெரிவித்து வந்தார். சங்கரரின் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரரும் அவரது தாயாரும் குளிக்கச் சென்றிருந்தனர். அப்பொழுது ஒரு முதலை சங்கரர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த சங்கரரின் தாய் பயந்து மகனைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். அப்பொழுது தாயை அமைதிப்படுத்திய சங்கரர் தன் தாயிடம் “தாயே! நீங்கள் என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,” எனக் கதறினார்.
தன் பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர் தாயும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அதன் பிறகு அந்த முதலை அழகான கந்தர்வனாக மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். சங்கரர் அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.
அப்போது அவரது தாய் மகனிடம், தான் உலகைத் துறக்கும் காலத்தில் (மரணமடையும் நிலையில்) சங்கரர் எங்கிருந்தாலும் தாயிடம் வந்து சேர வேண்டும் என்பதுடன் மகனாகத் தாயின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சங்கரரும் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி, இமயமலை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
சங்கரர் இமயமலை நோக்கிச் செல்லும் போது வழியிலிருந்த பல புனிதத் தலங்களுக்கும் சென்று வணங்கினார். இமயமலைக்குச் சென்ற அவர் பத்ரிநாத் பகுதியிலிருந்த கோவிந்த பகவத் பாதர் என்பவரைச் சந்தித்தார். அவர் மாண்டூக்ய, காரிக போன்ற உபநிடதங்களை எழுதிய கவுடபாதரின் சீடராவார். தனக்கென ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்த சங்கரர் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு வேதபாடங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
அவரிடம், தான் கேரளாவிலிருந்து வருவதாகவும், தன்னுடைய இளம் வயதில் தந்தை காலமான பின்பு தாயின் பராமரிப்பில் அருகிலுள்ள குருகுலத்திற்குச் சென்று வேதங்கள் சாஸ்திரங்கள் கற்றதையும் தெரிவித்தார். தனக்கு தாய் திருமணம் செய்து வைக்க விரும்பியதையும், தான் அதை மறுத்து ஆன்மிக வழியில் ஈடுபட விரும்பியதையும் தெரிவித்தார். இதற்காக ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தன் காலை முதலை ஒன்று கடித்ததாகவும், அதிலிருந்து விடுபட அம்மாவிடம் அனுமதி பெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும் தெரிவித்தார். தற்போது முழு சந்நியாச தீட்சை அளித்து வேதாந்தத்தைத் தனக்கு முழுமையாகக் கற்றுத் தரும்படியும் வேண்டினார்.
அவருடைய உண்மையான பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற கோவிந்த பகவத் பாதர் அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு துறவறத்தில் உயர்ந்ததும், சிறந்ததுமான “பரமஹம்ச சந்நியாச தீட்சை” அளித்து தாம் தம் குருவிடமிருந்து கற்றவற்றைப் போதித்தார். வேதங்கள் முழுவதையும் அவருக்குக் கற்றுக் கொடுத்ததுடன் அத்வைத சித்தாந்தத்தையும் எடுத்துச் சொன்னார்.
அத்வைத சித்தாந்தத்தில் உலகில் தத்தம் கர்ம வினையினால் தோன்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறை தத்துவம் அல்லது ஆத்ம தத்துவம் ஒன்றே என்பதும், இறைவனும் ஆத்மாவும் ஒன்றே என்றும் கற்பிக்கப்படுகிறது. குருகுலவாசம் முடிந்த பின்னர் சங்கரரை பாரத நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு அத்வைதக் கொள்கைகளை அனைவருக்கும் உணர்த்தும்படி கோவிந்த பகவத் பாதர் அறிவுறுத்தினார்.
குருவின் அறிவுறுத்தலுக்குப் பின்பு சங்கரர் காசி நோக்கிச் சென்றார். சங்கரர் காசியிலிருந்து தொடங்கி பாரதத்தில் பல சமயத் தலைவர்களுடன் சமயக் கருத்துக்களிலான விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அத்துடன் தன் குருவின் கட்டளைப்படி அத்வைதக் கொள்கைகளை நாடு முழுவதும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார். அவரைப் புலையன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் ஒன்று இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் அவனிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவன் மாமிசத்தைச் சாப்பிட்டபடி சங்கரரை நெருங்கினான்.
இதைக் கண்ட சங்கரர், “டேய், விலகிப் போடா!” என்று எச்சரித்தார். அவன் உடனே, “நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலக வேண்டும்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. இதையடுத்து “மனீஷா பஞ்சகம்” என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கு புலையன் வேடத்தில் வந்த சிவபெருமான் காசிவிஸ்வநாதராக மாறிக் காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம்தான் சங்கரருக்கு அத்வைத ஞானம் முழுமையாகக் கிடைத்தது. இதன் மூலம் சாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார் என்று சங்கர விஜயம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஞானிக்கு பக்தி அவசியமா?
ஒரு சமயம், ஆதிசங்கரர் ஆகாய வழியில் வானில் பறந்து சென்ற போது, மூவுலகிலும் இருப்பவரான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
“அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
“இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்க செல்கிறேன். நீங்களும் வாருங்களேன்” என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர்.
“விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல” என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.
குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும் போது, சங்கரர் வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தினார். பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், “ஞானிக்கும் பக்தி அவசியம்’ என்று எடுத்துக் கூறினார். நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார்.
இன்றும் குருவாயூரப்பன் வீதி உலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்கின்றனர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம். (தொன்ம நம்பிக்கை). என்றும் சொல்கிறார்கள்.
அத்வைதம் மூலம் உலகிற்கு ஒரு புது ஒளி ஏற்றிய சங்கரர் தன் புலமையால் வேதாந்த சூத்திரங்களை எழுதிய பட்ட பாஸ்கராவை விவாதத்தில் வென்றார். இதுபோல் தண்டிக்கும், மயூராவிற்கும் வேதாந்தத்தைக் கற்பித்தார். அபினவ குப்தா, முராரி மிஸ்ரா, உதயணாசாரியர், தர்ம குப்தர், குமரில, பிரபாகரா போன்றோரையும் பல்வேறு இடங்களில் நடந்த விவாதங்களில் வென்றார். இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் தன் புலமையால் வெற்றியைப் பெற்று தன் கொள்கைகளை வலியுறுத்திச் சென்று கொண்டிருந்தார். அவருடன் விவாதத்தில் தோற்ற பலரும் அவருடைய சீடராக மாறினார்கள்.
இந்நிலையில் சங்கரர் மஹிஷ்மதியில் கர்மமீமாம்சத்தில் தேர்ந்தவரும், சந்நியாசிகளை வெறுப்பவருமான மண்டன மிஸ்ரர் என்பவரை சந்தித்தார். சங்கரர் மண்டன மிஸ்ரரை பொதுவான விவாதத்திற்கு அழைத்தார். விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட அவர் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான தம் மனைவி சரசவாணியை (பாரத தேவி என்றும் குறிப்பிடுவர்) நடுவராகக் கொள்ள சம்மதித்தார். சங்கரர் தோல்வியுற்றால் கிருகஸ்தாஸ்ரமத்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும், மண்டன மிஸ்ரர் தோற்றால் தம் மனைவியிடமிருந்தே காஷாயம் பெற்று சந்நியாசியாக வேண்டும் என்றும் சபையோர் முன்னிலையில் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இரவும், பகலுமாக மண்டன மிஸ்ரருக்கும், சங்கரருக்குமிடையே வாத விவாதம் பதினேழு நாட்களுக்கு தொடர்ந்தது. சரசவாணி இருவர் கழுத்திலும் மலர்ந்த புஷ்பங்களால் உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை அணிவித்து விட்டு தம் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார். கடைசியில் மண்டன மிஸ்ரர் அணிந்திருந்த மலர்மாலை முதலில் வாடத் தொடங்கியது. இதன் பின்பு மண்டன மிஸ்ரர் தம் தோல்வியை ஏற்றுக் கொண்டார். காஷாயம் தரித்து சங்கரரின் சீடரானார்.
இதைக் கண்ட சரசவாணி தம் கணவரின் பத்தினியான தம்மையும் வென்றால் தான் வெற்றி முழுமை அடையும் என்று கூறினார். முதலில் பெண்ணுடன் விவாதிப்பதா என்று சங்கரர் தயங்கினாலும், அவ்வம்மையார் சங்க கால மகளிரின் புலமையை பல மேற்கோள்களுடன் எடுத்துக்காட்ட பின்னர் சம்மதித்தார். சங்கரர் மேலும் பதினேழு நாட்கள் தொடர்ந்து விவாதித்து வெற்றி பெறும் நிலையில் இருந்தார். அப்பொழுது சரசவாணி பிரம்மசாரியான சங்கரரிடம் காம சாஸ்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். சந்நியாசியான சங்கரரால் அதற்குப் பதில் சொல்ல இயலவில்லை.
சங்கரர் சரசவாணியிடம் தன் தோல்வியைத் தற்காலிகமாக ஒப்புக் கொண்டதுடன் தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்குமாறும் வேண்டினார். ஒரு மாத காலத்திற்குள் அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும் கூறிச் சென்றார். சரசவாணியும் அதற்குச் சம்மதித்தார்.
அதன் பிறகு சங்கரர் தன் சீடர்களுடன் காசிக்குச் சென்றார். இல்லறவியலைக் கண்டறியவும், சிற்றின்பத்தின் எல்லையை அறியவும், மது, மங்கை, மோகம், காமம் போன்ற கலைகளை அறியவும், சந்நியாசியான தன் உடலால் இன்பம் எதுவும் அனுபவிக்கக் கூடாது என்றும் முடிவு செய்த அவர் பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) செய்ய முடிவு செய்தார்.
இதற்காகத் தான் பிரவேசிக்கப் போகும் உடல் கிடைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து ஆத்ம யோகத்தில் அமர்ந்தார். சங்கரரின் யோக நிலையில் அந்த நாட்டு மன்னன் அமரூகன் என்பவன் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் மரணமடைந்தது தெரிந்தது. அவன் அதிகமாக மது அருந்துவதுடன் காமப்பித்து பிடித்து பல கன்னியர்களைக் கொண்டு வந்து இன்பம் அனுபவித்து வந்தவன் என்பதும் தெரிந்தது.
உடனே தன் சீடர்களில் முக்கியச் சீடரான பத்மபாதர் என்பவரை அழைத்து, “இந்த நாட்டு மன்னன் காமுகன், பல கன்னியர்களுடன் இன்பமுற்றவன். மது அருந்துபவன். அளவுக்கதிகமாக மது அருந்தியதால் அவன் இன்று இறந்து விட்டான். அவன் உடலில் தான் பிரவேசிக்கப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட சீடர் பத்மபாதர், “தாங்கள் முற்றும் துறந்த சந்நியாசி மற்றும் ஞானி. தாங்கள் இறந்து விட்ட அந்த அரசன் உடலில் பிரவேசித்து அந்தப்புரத்து அழகிகளுடன் இருப்பதாலும், அரண்மனையில் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கையில் வாழ்வதாலும் தங்கள் உண்மைத் தன்மைக்கு ஊறு ஏற்பட்டு விடாதா?” என்று கேள்விகளைக் கேட்டார்.
சங்கரர், “தேளாலும், பாம்பாலும் நமக்குப் பயம் உண்டாகிறது. நாமே தேளாகவும், பாம்பாகவும் மாறிவிடும் போது பயம் தேவையில்லை. நான் சரசவாணியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அதற்கு இதுவே சரியான வாய்ப்பு. அரசன் அமரூகன் உடலில் பிரவேசித்து அனுபவப்பூர்வமாக விடை அறிந்து கொள்வேன். ஒரு மாத காலத்திற்குள்ளாகவே என் உடலுக்குத் திரும்பி விடுவேன். அதுவரை இந்த உடலை அகோபில குகையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருங்கள்” என்று கூறியபடி கீழே படுத்தார்.
அந்த உடலிலிருந்து சங்கரரின் ஆவி பிரிந்து சென்று அரண்மனையில் இறந்து கிடந்த அரசன் அமரூகன் உடலுக்குள் பிரவேசித்தது. அமரூகன் உயிர் பெற்று எழுந்தான். அவனுக்குச் சிகிச்சையளித்த வைத்தியரும், அருகிலிருந்த அமைச்சரும் ஆச்சர்யமடைந்தனர். உடனே ராணி, அரசனும் தன் கணவனுமான அமரூகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அமரூகன் விரும்பும் மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தாள். அமரூகன் அதை வாங்கிக் கீழே ஊற்றி விட்டு இந்த விசத்தை இனி குடிக்க மாட்டேன் என்றான். ராணி மீண்டும் மீண்டும் ஊற்றிக் கொடுக்க அவனும் குடிக்க மாட்டேன் என்றவாறு கீழே ஊற்றிக் கொண்டேயிருந்தான்.
மரணத்துக்குப் பின்பு உயிர்த்தெழுந்த மன்னன் தன் எண்ணங்களாலும், குணநலன்களாலும் முற்றிலும் மாறியிருந்ததைக் கண்டு ராணிகளும், அமைச்சர்களும் மகிழ்ந்தனர். அரசனின் உடலில் இருப்பது அமரூகன் உயிரல்ல, வேறு ஏதோ ஒரு மகானின் உயிர் என்பதை உணர்ந்து கொண்டனர். மன்னனை அந்த மகானின் உயிருடன் அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினர்.
இதனால் சில தூதுவர்களை அனுப்பிச் சுற்றுப்புற காடுகளிலும், குகைகளிலும் யோக வல்லுனர், ஞானி ஒருவரின் உடல் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்று தேடி அழிக்க உத்தரவிட்டனர். அவர்களும் உயிரற்ற உடல் எங்கிருந்தாலும் அழிக்கும் நோக்கத்துடன் சென்றனர். சர்வ சக்தி படைத்த மாயையின் வசமான சங்கரர் அரசிகளுடன் கூடி மகிழ்ந்து அம்ரூகன் பெயரால் அமரூகம் எனும் தனி காவியத்தையும் எழுதிக் கொண்டிருந்தார். இதனால் தாம் வந்த காரியத்தையும், தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்திருந்தார்.
சங்கரர் அமரூகனின் உடலில் பிரவேசித்து ஒரு மாத காலமாகக்கூடிய நிலையில் குரு வராமல் போகவே அவருடைய சீடர்கள் அரசவையை அடைந்தனர். அவர்கள் மன்னர் முன் சில தத்துவப் பாடல்களைச் சொல்ல சங்கரருக்கு பூர்வாசிரம நினைவுகள் திரும்பியது. தான் எழுதிக் கொண்டிருந்த அம்ரூத காவியத்தைச் சீடர்கள் கையில் கொடுத்து விட்டுத் தம் உடலைத் தேடிப் புறப்பட்டார். அம்ரூகன் உடல் கீழே விழுந்தது. இதற்குள் அரச தூதுவர்கள் அகோபில குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரரின் உடலை எடுத்துச் சென்று எரியூட்டத் தொடங்கி இருந்தனர். இதையறிந்த சங்கரர் தன் யோக சக்தியினால் சிதையிலிருந்த தனக்குரிய உடலுக்குள் பிரவேசித்தார். அப்படியே சிதையில் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்திடவும் வேண்டினார். மழை பெய்து தீ அணைந்தது.
அதன் பிறகு சங்கரர் சிதையிலிருந்து எழுந்து வந்தார். தான் எழுதிய அம்ரூக காவியத்துடன் மீண்டும் மண்டன மிஸ்ரருடைய இல்லத்திற்குச் சென்று சரசவாணியின் எல்லாக் கேள்விகளுக்கும் தக்கவாறு பதிலளித்து வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் மண்டன மிஸ்ரர் மற்றும் அவரது மனைவி சரசவாணி இருவரும் சேர்ந்து தங்களுடைய செல்வம் அனைத்தையும் சங்கரருக்குக் கொடுத்தனர். தங்களைச் சீடராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டினர். சங்கரர் அதை அவ்வூரிலிருந்த ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பகிர்ந்தளித்தார். மண்டன மிஸ்ரருக்கு சுரேஷ்வராச்சார்யா என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த மடத்திற்கு பீடாதிபதியாக்கினார். சரசவாணியை சிருங்கேரி மடத்தின் சாரதையாக இருக்கச் செய்தார். (மண்டன மிஸ்ரர், சரசவாணி ஆகியோர் பிரம்மா, சரசுவதி ஆகியோரின் அம்சம் என்று சொல்கின்றனர்)
சங்கரர் என்றாலே அவர் சைவ அல்லது வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சங்கரரை “ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்” என்று சொல்வார்கள். அவர் காலத்தில் இந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத நிலையிருந்தது. மேலும் பெளத்த மற்றும் சமண சமயங்களால் பெருகிய வேற்றுமைகளால் இந்து மதம் அழிந்து போய்விடும் நிலையும் இருந்தது. இந்நிலையில் சங்கரர் இந்துமத பிரிவுகளிடையிலான சண்டை, சச்சரவுகளை குறைக்க முடிவு செய்தார். அவர் காலத்தில் இந்து மதத்தில் மட்டும் சுமார் 72 பிரிவுகள் இருந்தன. இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளை ஒதுக்கியும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று முக்கியமான ஆறு வழிமுறைகளை வகைப்படுத்தினார். அவை;
1. சைவம் – சிவனை வழிபடுபவர்கள் – சைவர்கள்
2. வைணவம் – விஷ்ணுவை வழிபடுபவர்கள் – வைணவர்கள்
3. காணாபத்யம் – கணங்களுக்கு எல்லாம் அதிபதியான “கணபதி” வழிபாடு செய்பவர்கள் – காணாபத்யர்
4. கெளமாரம் – முருகனை வழிபடுபவர்கள் – கௌமாரர்கள்
5. சௌரம் – சூரியனை வழிபடுபவர்கள் – சௌரர்கள்
6. சாக்தம் – சக்தியை வழிபடுபவர்கள் – சாக்தர்கள்
இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஆறு பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் இறைவன் ஒருவனையே சாரும் என்றும் இவையனைத்தும் சேர்ந்து ஷண்மதம் என்றும் சொன்னார்.
ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், “இவர் மட்டுமே உனக்குக் கடவுள்” என்று எவரையும் கட்டாயப்படுத்தாமல், இந்த அறுவரில் எவரை விரும்பினாலும் அவரையே முழு முதற் கடவுளாகப் போற்றலாம்” என்று வழி காட்டுகிறது சங்கரரின் அத்வைதம். இதுபோல், “உன்னுடைய விருப்ப தெய்வமே மற்ற கடவுளாகவும் வடிவம் தாங்கி இருக்கின்றது என்றும் இந்தச் சித்தாந்தம் சொல்கிறது. ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிகளையும் தானே இயற்றித் தந்தார்.
இந்நிலையில், சங்கரரின் தாய் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருப்பதை சங்கரருக்கு சிலர் தெரிவித்தனர். இதைக் கேள்வியுற்றதும் தாம் தாய்க்கு அளித்த வாக்குறுதியின் படி தம் சீடர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காலடிக்குத் திரும்பினார். தாய்க்கு வாக்களித்த படி “வெறுமனே” வர முடிந்ததே தவிர,குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க அவரால் முடியவில்லை. அவர் தன் தாயின் கால்களைத் தொட்டு வணங்கியபடி, “மாத்ரு பஞ்சகம்” என்று உள்ளம் உருகும் ஐந்து பாடல்களைப் பாடினார்.
தாயின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானிடம் தாயின் அந்திம காலம் சிரமமில்லாமல் இருக்க வேண்டினார். இவரின் வேண்டுதலை அறிந்த சிவபெருமான் சிவகணங்களை அனுப்பி வைத்தார். சிவகணங்களின் உருவங்களைக் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள் சங்கரரிடம், தனக்குப் பயமாக இருக்கிறது சிவகணங்களுடன் கைலாசம் செல்ல முடியாது என்றும் மறுத்தார். உடனே சங்கரர் விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவின் தூதுவர்கள் அவரது தாயாரை வைகுண்டம் அழைத்துச் சென்றனர்.
பழமைவாதிகளான நம்பூதிரி பிராமணர்கள் சன்னியாசியான சங்கரரை இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று தடுத்தனர். நம்பூதிரி பிராமணர்களின் உத்தரவை மீறி அவருக்கு உதவவும் அங்கிருந்த பலரும் மறுத்தனர். அவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்கு நெருப்பைக் கூட அளிக்க மறுத்தனர். ஆனால் சங்கரர் தன் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதிப்படி தானே தனியாகத் தன் தாயின் உடலைப் புழக்கடைக்கு எடுத்துச் சென்று வைத்து, வாழைமரப் பட்டைகளைக் கொண்டு அடுக்கி அதைத் தன் யோக சக்தியினால் எரியூட்டினார்.
அதன் பின்பு சிருங்கேரிக்கு திரும்பிய சங்கரர் தன்னைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்தவாறு இந்திய தேசத்தின் கிழக்குக் கடற்கரையோரமாக தல யாத்திரை மேற்கொண்டார். பூரியில் கோவர்தன மடத்தை நிறுவினார். பின்னர் துவாரகைக்குச் சென்று அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.
மண்டன மிஸ்ரருக்கு “சுரேஷ்வராச்சார்யா” என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரி மடத்திற்கு பீடாதிபதியாக்கியது போல் பிற சீடர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகாசார்யா என்ற மூவருக்கும் முறையே ஜகன்னாத மடம், துவாரகாமடம், ஜோஷியோ மடம் ஆகியவற்றின் பீடாதிபதிகளாக நியமித்தார்.
சங்கரரின் சந்நியாச தர்மத்தைப் பின்பற்றியவர்களில் முக்கியமான பத்து பிரிவுகளை ஏற்படுத்தினார். அவர்கள் தம் ஆசிரமப் பெயரின் பின்னால் சரஸ்வதி, பாரதி, புரி (சிருங்கேரி மடம்), தீர்த்தர், ஆசிரம (துவாரகா மடம்), கிரி, பர்வத, சாகர் (ஜோஷி மடம்), வன, ஆரண்ய (கோவர்தன மடம்) என்று இணைத்துக் கொள்ளுமாறு செய்து “தசநாமி சந்நியாசிகள்” என்ற அமைப்பையும் உருவாக்கினார். இவர்களில் ஆழமான வேதாத்தியானமும், தியானமும் செய்து தன்னை உணர்ந்தவர்கள் பரமஹம்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.
“சிவானந்த லஹரி” பாடி தம் பக்திப் பரவசத்தை அமுத தாரை வடிவில் உலகிற்கு வழங்கிய சங்கரர், உஜ்ஜயினிக்குச் சென்று மனிதர்களைக் கொன்று குவித்த பைரவர்களை வென்றார். காஞ்சிபுரத்திற்குச் சென்று சாக்தர்களை வென்று கோவில்களைப் புனிதப்படுத்தினார். திருவிடைமருதூருக்குச் சென்று அங்குள்ள ஈசன் கோவிலில் தம் சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் மீது “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்” பாடி யந்திரங்களை கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்து கோவிலை கணக்கற்ற பக்தர்கள் தேடி வருமாறு செய்தார்.
கொல்லூரில் மூகாம்பிகை கோவிலுக்கு சங்கரர் செல்கையில், காது கேட்காத, பேச முடியாத ஒரு அறிவு மிக்க அந்தணச் சிறுவனுக்கு நெல்லிக்கனி கொடுத்து ‘ஹஸ்தாமலகன்’ என்று பெயரிட்டு தன்னுடைய முக்கியச் சீடர்களில் ஒருவராக்கிக் கொண்டார். கிரி என்ற சிறுவனை மந்தப் புத்தியுள்ளவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க அவனை “தோடகாஷ்டகத்தை” சொல்ல வைத்து “தோடகர்” என்று பெயரிட்டார்.
இவர் எழுதிய “சரீரிக் பாஷ்யா”, “சனட் சுஜாத்தியா”, “சஹஸ்ரநாம அத்யாயா”, “விவேக சூடாமணி”, “ஆத்ம போதா”, “அபரோக்ஷ அநுபூதி”, “ஆனந்த லஹரி”, “ஆத்ம அனாத்ம விவேக”, “த்ருக் த்ருஷ்ய விவேக”, “பஜகோவிந்தம்”, “உபதேச சஹஸ்ர” போன்ற பல நூல்கள் இன்றும் இந்து சமய ஆன்மிக ஈடுபாடுடைய பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.
இப்படி சங்கரரின் அற்புதங்கள் எத்தனையோ உண்டு. இந்தியா முழ்வதும் யாத்திரை சென்று பல அற்புதங்கள் நிகழ்த்திய மகான் சங்கரர் கடைசியாக இமயமலையை நோக்கிச் சென்று பத்ரியில் ஒரு கோவிலைக் கட்டினார். அங்கிருந்து உயர்ந்த இடத்தில் இருந்த கேதார்நாத்தில் ஒரு குகைக்குள் சென்ற சங்கரர் தன்னுடைய முப்பத்திரண்டாம் வயதில் ஈசனுடன் கலந்தார். முப்பத்திரண்டு வயதிற்குள் முக்தியடைந்த அவர் இன்றும் இந்து சமயத்தவர் பலராலும் நினைவில் கொள்ளப்படுகிறார்.
Thanks n Regards
Jeevanandam K