அய்யப்ப சாமிகள் அறிய வேண்டிய 25 விளக்கங்கள்


 

அய்யப்ப சாமிகள் அறிய வேண்டிய 25 விளக்கங்கள்

மிகவும் பொறுமையாக படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும்

அய்யப்பன் அருள் பெற கடும் விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்பன் மகிமை பற்றி சிலர்தான் உணர்ந்திருந்தனர்.

ஆனால் இன்று அய்யப்பன் அருளை பெரும்பாலானவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

கால சுழற்சி காரணமாக அய்யப்ப வழிபாடுகளில் இன்று பெரும் மாற்றம் வந்து விட்டது.

நிறைய பேர் பணம் கடன் வாங்கியாவது அய்யப்பனை தரிசிக்க சபரிமலை செல்கிறார்கள்.

“கடன் வாங்கி வந்து என்னை தரிசனம் செய்” என்று சபரிமலை சாஸ்தா ஒரு போதும் சொல்லியதே இல்லை.

அது போல அய்யப்ப விரதம், பயணம், இருமுடி கட்டுதல் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளது.

என்னதான் அறிவியல் மாற்றங்கள் வந்தாலும் பாரம்பரிய பூஜை வழிமுறைகளை விட்டு விடக்கூடாது.

இதற்காகவே ஒவ்வொரு அய்யப்ப பக்தரும் தெரிந்து கொள்வதற்காக அய்யப்ப சாமி பூஜை, வழிபாடு தொடர்பான 25 கேள்விகளையும், விளக்கங்களையும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

இது நிச்சயம் அய்யப்ப பக்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

1. சபரிமலை செல்லவிரும்பும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் நாள், நட்சத்திரம் திதி ஆகியவை பார்க்கத் தேவை இல்லை.

விளக்கம்: குளிர் காலத்தின் தொடக்க நாள் அது. உடலை அப்போதிருந்தே தயார்படுத்திக் கொண்டால்தான் குளிர் நிரம்பிய மார்கழி, தை போன்ற மாதங்களில் மலைப் பிரதேசத்தில் நம் உடல் ஆரோக்கியமாக விளங்கும். இதை கருத்தில் கொண்டே கார்த்திகை மாதம் மாலை அணிவிக்கிறார்கள்.

2. கார்த்திகை மாதம் முதல் தேதி தவறினால் ஏதாவது ஒரு புதன் கிழமையிலோ, சனிக்கிழமையிலோ அல்லது உத்தர நாட்சத்திரம் வரும் நாளிலேயோ மாலை அணியலாம்.

விளக்கம்: புதன் என்ற கிரகத்துக்கு உரிய அதிபதி ஸ்ரீமஹாவிஷ்ணு. இவர் தர்ம சாஸ்தாவின் அன்னையாவார். அவரை நினைவூட்டும் விதமாகவும், வழிபடும் விதமாகவும் புதன்கிழமை அமைகிறது.

புதனுக்கு உரிய தலமாக வணங்கப்படுவது மதுரை, மதுரையின் நாயகர் ஸ்ரீசொக்கநாதர். புதனுக்குரிய காயத்ரீயாகச் சொல்லப்படுவது.

கஜத்வஜாய வித்மஹே, ஸூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ புத: ப்ரசோதயாத்!!

ஆகவே சாஸ்தாவின் தந்தையாரான பரமசிவனும் இந்நாளில் நினைவூட்டப் பெறுகிறார்.

புதன்கிழமை மாலை அணிவோர்க்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பெற்றோரான ஸ்ரீமஹா விஷ்ணு, ஸ்ரீ பரமேஸ்வரின் அருள் கிடைக்கிறது இதனால், அவர்கள் வேண்டியதை வேண்டியவாறு பெறுவர்.

சனிக்கிழமையில் உத்தர நட்சத்திரத்தில் தர்ம சாஸ்தாவின் ஜனனம் பந்தளத்தின் மன்னன் ராஜசேகரன் பார்க்கும் தினத்தில் பம்பையாற்றில் நிகழ்ந்தது.

எனவே அந்நாளில் மாலை அணிவதும் சிறப்பாகும்.

ஜோதிட ரீதியாக சனியின் அதி அதவதையாக சாஸ்தா இருப்பதன் காரணமாக, சனியினால் பீடிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டு விடுதலையானவர்களும் இந்நாளினைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

3. மாலை என்பது தனித்த சொல்லாக இருந்தால் அது பூமாலை என்ற பொருளில் வரும், ஆகவே இதனை முத்திரை மாலை என்று அழைப்பாளர்கள். முத்திரை என்பது இறைவனாகிய ஐயப்பனின் உருவம் தாங்கிய காசு ஒன்றினை மாலையில் சேர்த்து அணிவதாகும். இம்முத்திரை மாலை துளசிச் செடியின் வேரிலிருந்து உருவாக்கப்பட்ட மணிகளினால் கோக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

விளக்கம்: துளசி மாலை இறைவனாகிய ஸ்ரீமந் நாராயணருக்கு உரியது. ஸ்ரீமந் நாராயணர் சாந்த குணம் கொண்டவர். கோப மற்றவர். எனவே அவர் மனமும், உடலும் குளிர்ந்த தன்மை வாய்ந்தவை.

அவர் பாற்கடலில் ஆதிசேஷனே படுக்கையாகக் கொண்டு படுத்திருக்கும் பரம தயாநிதி. எனவே அவர் நினைவாகத் துளசி மாலை அணியப்படுகிறது.

விஞ்ஞான ரீதியாக துளசி மாலை அணிவதால் உடல் ஆரோக்கியம் அடைகிறது.

நோய், நொடிகள் தாக்காது. இருதயப் பிணிகளும், சுவாச சம்பந்தப்பட்ட பிணிகளும் நீங்கும். நெடிய மலையின் மீது ஏறும் ஓர் மனிதனுக்கு இவை எல்லாம் இருக்கக் கூடாது என்பதன் நிமித்தமே, அவ்வியாதிகளைத் தீர்த்து வைப்பதன் பொருட்டு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

ஆண்டவனைத் தரிசிக்க ஆரோக்கியமும் இருக்க வேண்டும். சிலர் இதனைக் கருதாமல் ருத்ராட்ச மலை என்ற எலத்தங் கொட்டையில் தயாரிக்கப்பட்ட போலி மாலையையும், போலியான துளி மாலையையும், பவழ மாலையையும், தாமரை இலை மாலையையும் அணிவதுண்டு.

இது விபரம் தெரியாத நபர்களின் தவறான வழிகாட்டுதல் ஆகும்.

காலம் காலமாக இப்படி நடைமுறை மீறப்பட்டதால் சரி என வாதிப்பவரும் உண்டு. எல்லா மாலைகளும் போலியாக இருப்பதால் முத்திரை மாலை தரிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

மணிகண்டன் கைலாயத்திலிருந்து அனுப்பப்பட்ட போது உயர்ந்த மணிகளினால் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றை ஸ்ரீபரமேஸ்வரர் அணிந்து அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் தான் அவருக்கு மணிகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது.

மாலை அணிந்தவர் அனைவருமே மணிகண்டனின் மறு பிம்பங்கள் என்று நினைவூட்டுமுகமாகவும் இம்மாலை அணிவிக்கப்படுகிறது.

4. முத்திரை மாலையை நாமே அணியக்கூடாது. ஆலயத்தின் அர்ச்சகர்களிடம் கொடுத்து, இëறைவன் முன்னர் வைக்கப்பட்டு முறையான பூஜைகள் செய்விக்கப்பட்ட பின்னரே அணிந்து கொள்ள வேண்டும்.

விளக்கம்: தக்க குருநாதர் கிடைக்காதவர்கள் இறைவனையே மானசீகக் குருவாகவும்… அவருடைய பிரதிநிதியாக ஆலய அர்ச்சகரையும் கருதி அவர் கையாலேயே, இறைவனின் திருச்சந்தியில் அவர் முன்னர் தரித்துக் கொள்ளலாம்.

5. சிலர் தங்களுடைய வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வணங்கி மாலை அணிந்து கொள்வார்கள். இது சரியாப தவறா?

விளக்கம்: வீட்டில் பூஜை அறையில் வைத்து, வணங்கி மாலை அணிபவர்கள் தினந்தோறும் பூஜைகள் செய்து இறைவனை வணங்குபவர்களாக இருப்பார்கள்.

தினமும் வணங்காதவர்களும், பூஜை செய்யாதவர்களும், வீட்டில் வைத்து முத்திரை மாலை அணியக் கூடாது. இறைவனின் தலம் புனிதமானது. அங்கே இறைவனின் அருள் ஆற்றல் அலைகள் இருந்து கொண்டே இருக்கும். எனவே ஆலயத்தில் மாலை அணிவதே சிறந்தது.

6. பெரும்பாலும் மாலை அணிவிக்க சற்குரு ஒருவர் அவசியம். இந்த சற்குரு என்பவர் பல முறை ஐயப்பனின் ஆலயம் சென்று வந்தவராக இருக்க வேண்டும்.

குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து மலை சென்று மீண்டவரை பழமலை சாமி (மலைப் பயணம் செய்து செய்து பழைமை அடைந்தவர்) பல மலைசாமி (பல தடவை மலை யாத்திர செய்தவர்) என்று அழைப்பர். இவரும் நல்ல குருநாதராகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர். பதினெட்டு முறை சென்று மீண்டவர் `சற்குரு’ என்று போற்றப்படுகின்றார். யார் நமக்கு மாலையை அணிவிக்கிறார்களோ அவர் தான் நம் குருநாதர் என்பதை மறக்கக் கூடாது.

விளக்கம்: ஸ்ரீபரமேஸ்வரர் தகப்பனாக இல்லாமல், குருவாக நின்று உபதேசித்து உயர்ந்த மணிகளை உடைய மாலையை தர்ம சாஸ்தாவின் கழுத்திலே அணிவித்த நிகழ்ச்சியை நினைவூட்டவே இப்படி குருமார்களினால் மாலை அணிவிக்கப்படும் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

7. சிலர் முத்திரை மாலையை பெற்றோரின் மூலம் அணிந்து கொள்வதுண்டு. அதுவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறிப்பதற்குத்தான். குருவாகவும் தந்தையாகவும் நிற்பவன் அவன்தானே!

8. மாலை அணிந்தவுடன் தான் ஏற்றுக் கொண்ட குரு நாதருக்கு இயன்ற காணிக்கைகளைத் தர வேண்டும்.

விளக்கம்: மாலையுடன் தோன்றிய மணிகண்டன் ராஜசேகரனுக்கு மகிழ்வை கொடுத்தான். மஹிஷியைக் கொன்றதன் மூலம் தேவர்கள் புலிகளாக மாறி காணிக்கைகள் ஆயினர். முனிவர்களுக்குத் தானே காணிக்கையாகி பொன்னம் பலமேட்டில் ஒளிர்ந்தான். பக்தர்களுக்கும் தன்னை ஈன்றவர்களுக்கும் காணிக்கை ஆனான். இதனை நினைவு கூரவே குருநாதருக்கு காணிக்கை கொடுப்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது.

9. மாலை அணிந்தவுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து, தேங்காயை விடலையாக உடைக்க வேண்டும்.

விளக்கம்: இது மணிகண்டனின் பூதங்களைத் திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது. மாலை அணிந்த அத்திருநாளில் ஏழைகளும், ஆதரவற்றவர்களும் அத் தேங்காய்களை எடுப்பதால் திருப்தியுற்று ஆசீர்வதிப்பவர்களாக மாறுகின்றனர்.

10. மாலை அணிவது சபரிமலைக்கு வரும் அய்யப்ப சாமிகளின் உடைகள் கருப்பு வண்ணத்தில் இருக்கலாம். நீல நிறமாக இருக்கலாம். மஞ்சள் ஆடையும் நல்லதே! சிலர் பச்சை நிற வேஷ்டி கட்டுவதுண்டு. காவி நிற உடை விலகக்கப்பட வேண்டும்.

விளக்கம்: கருப்பு வண்ணம் அணிவதால் சனீஸ்வரரையும், நீல வண்ணம் அணிவதால் தர்ம சாஸ்தாவையும், பொன் வண்ணமாக அணிவதால் ஸ்ரீபரமேஸ்வரரையும், பச்சை வண்ணம் ஸ்ரீமந் நாராயணரையும், திருப்திபடுத்தும், இவை தற்காலிக சந்நியாசத்தின் அடையாளங்கள். காவி நிற உடை என்பது நிரந்தர சந்நியாசத்தின் அடையாளம். காவி கட்டியவன் மீண்டும் இல்லறத்துக்குத் திரும்பக் கூடாது என்றொரு விதி உண்டு. இதனை யாரும் மதிப்பது இல்லை.
இப்படி வண்ண வண்ண ஆடைகளை ஏன் கட்ட வேண்டும் கொடிய கானகத்தின் நடுவே, பச்சை இலைகளுக்கு நடுவே நடந்து செல்லும்போது அடையாளம் காட்டுவது இவ்வண்ண ஆடைகளே ஆகும். எனவேதான் கருப்பு, நீலநிற ஆடைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. பச்சை வண்ண ஆடை பெரும்பாலும் அணியப்படுவது இல்லை. இதோடு தத்துவ ரீதியாக இன்னுமொரு விளக்கமும் சொல்லப்படுவதுண்டு.
கருப்பு இருள், சிலர் இதனைக் காத்து கருப்பு என்று எழுதுவதுண்டு. இது தவறு. கருப்பு என்றால் கோபம் என்பது பொருளாகும். இருள் என்பது அறியாமை, அஞ்ஞானம் என்றும் சொல்வதுண்டு. நாங்கள் அறியாதவர்கள். அஞ்ஞானம் நிரம்பப் பெற்றவர்கள். எனவே பரிசுத்த பரம்பொருளான உன்னைச் சரண் அடைகின்றோம் என்று காட்டவே கருப்பும், அதை ஒட்டிய வண்ணமான நீலமும் உபயோகிக்கப்படுகிறது.
சனிச்சுவரனுக்கு பிரியமான வண்ணங்கள் கருப்பும், நீலமும். இதனை அணிவதால் சனியின் திருப்திக்கும் பாத்திரங்களாவார்கள். அதன் பிறகு பழக்கத்தை மாற்ற சில அறியாதவர்களினால், பச்சையும், காவியும், பொன் நிறமும் பயன்படுத்தப்பட்டன. இவை ஏற்கத்தக்கதல்ல. நிரந்தரத் துறவின் அடையாளமான காவியைக் குடும்பஸ்தர்கள் அணிந்து விட்டுக் களைவது நல்லதல்ல. இது விதியை மீறிய செயல்.
மஞ்சள் வண்ணமும், சிவப்பு வண்ணமும் அம்பிக்கையைத் தவிர வேறு எந்த இறை வனுக்கும் பொருத்தமான தன்று. பொன் வண்ணம் வீட்டிலிருந்து கொண்டே துறவு மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர்களுக்கு உயர்ந்தது. அய்யப்ப பக்தர்கள் மலைக்குப் போகும் முன், விரதத்தைக் கடைப்பிடிக்கும்போது, அசுத்தமானவர்கள் அவர்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற நினைவூட்டுதலுக்காகவே வண்ணங்களில் உடைகளை அணிகிறார்கள் என்பது முக்கியமானது.

10. மாலையிட்ட காலங்களில் கடுமையான விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் பெண்கள் மேல் உள்ள இச்சையைத் தவிர்க்க வேண்டும்.

விளக்கம்: இதனால் இந்த்ரியம் எனப்படும் விந்து கட்டப்படுகிறது. விந்து கட்டப்பட்டால் உடல் பலம் அடைகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மலை ஏறுவதற்கு உரிய தெம்பு கிடைக்கும். ஆரோக்கியமற்ற உடல் யாத்திரையில் கெட்டு, தானும் சிரமத்திற்கு ஆளாவதுடன், மற்றவரையும் சிரமப்படுத்தி விடும்.

11. வேடிக்கை, விளையாட்டுக்களைத் தன்னகத்தே கொண்ட திரைப்படம், ஒலி, ஒளிப்படம், நாடகம், கூத்து முதலியவற்றைப் பார்க்கக் கூடாது.

விளக்கம்: மாலை அணிந்து விரதம் இருக்கும் நாட்களில் தியேட்டருக்க சென்று சினிமா படம் பார்த்தால் மனநலம் கெடுகிறது. திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளும், காமக் களியாட்டங்களும் மனதைக் கெடுத்து விடுவதால் உடல் நலம் கெட்டு செய்யத் தகாததை செய்யும் எண்ணம் தூண்டி விடப்படுகிறது. எனவே இதனைத் தவிர்ப்பதால் மன நலம் மலை யாத்திரைக்கு நன்முறையில் தயாராகிறது.

12. போதையூட்டும் பொருட்கள் குடிக்கவோ, பிடிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.

விளக்கம்: சிகரெட் புகைப்பதால் நரம்புகள் தளர்ந்து போகின்றன. செய்யத் தகாததைச் செய்யத் தூண்டுகின்றன. சபரிமலை இருக்கும் இடம் நாற்புறமும் பள்ளத்தாக்குகளாலானது. போதைப் பொருளை வழக்கமாய்க் கொண்டவன் அப்போதையின் காரணமாக தவறி விழுந்து விடலாம். மலையேற முடியாமல் மயங்கிக் களைத்து விடலாம். எனவே இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

13. புலால் உண்ணக் கூடாது.

விளக்கம்: போதையில் இருப்பனுக்குப் புலால் தேவை. இப்புலால் உணவானது ராஜஸ, தாமஸ குணத்தைக் கொண்டது. மதுவுண்டவனுக்கு புலால் எப்படித் தேவையோ, அதைப் போலவே புலாலை உண்டவனுக்கு அளவுக்கு மீறி காம இச்சை உண்டாகிறது. இதனால் அவனுக்குப் பெண் தேவைப்படுகிறது. பெண்ணால் உடல் பலகீனம் அடைகிறது. கை, கால்கள் சோர்ந்து விடுகின்றன. இந்நிலையில் உறுதியான உடல், மலை ஏறுபவனுக்கு வாய்க்காது போகின்றது. எனவேதான் புலால் உணவு வகைகளை உண்ணக் கூடாது.

14. காலணிகள், குடை போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.

விளக்கம்: அய்யப்பன் வீற்றிருக்கும் சபரிமலை ஏற்ற, இறக்கமானது. கல்லும், முள்ளும் நிறைந்தது. சில நேரம் செங்குத்தான மேட்டிலும், சில நேரம் கிடுகிடு பாதாளத் திலும், ஏறவும் இறங்கவும் வேண்டியது வரும். அப்போது செருப்பு இருந்தால் விளைவு விபரீதமாகி விடும். இயற்கையான பிடிப்பும், நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தியும் செருப்புக்கு இல்லை.
எனவே செருப்பு அணியக் கூடாது. இத்துடன் செருப்பை இடைவிடாது அணிந்திருப்பதால் நம் உள்ளங்கால் ஓர் மிருதுத் தன்மையுடன் காணப்படும். அந்த மிருதுத் தன்மை மாறி, முரட்டுத் தன்மை ஏற்பட்டால் தான் கானகத்தில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் தாங்கக் கூடிய வல்லமை நமக்கு உண்டாகும்.
எனவே காலணிகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. விரத காலத்தில் இயற்கையின் சீற்றத்தைச் சமாளித்துக் கொள்ளப்பழகி விட்டால் மலைப் பிரயாணத்தின்போது எதிர்பாராது நேரிடும் திடீர் மழை, அதன் விளைவாய் எழும் குளிர் காற்று இவற்றைச் சமாளிக்க முடியும். உடலுக்கு எவ்வித கெடுதியும் நேரிடாது. ஆகவே தான் குடை பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுள்ளது.

15. எண்ணை தேய்த்துக் குளிக்க கூடாது

விளக்கம்: எண்ணை தேய்த்துக் குளிப்பதால் நரம்புகள் தளர்ந்து போகும். இதனால் வழக்கத்துக்கு மீறிய சோம்பேறித் தனமும், தூக்கமும் வந்து சேர்ந்து விடும். எனவே விழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் சபரிமலை செல்பவர்கள் இரவிலும், நடப்பதைப் பழக்கமாகக் கொண்டவர்கள். இந்நிலையில் சோர்வு தரும் இச்செயலினால் நடை மந்தப்படுவதுடன், தூக்கக் கலக்கத்தினால் ஆபத்தை அடைகின்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது. எனவேதான் விரத நாட்களில் எண்ணைத் தேய்த்துக் குறிக்கக் கூடாது.

16. முகச் சவரம் செய்து கொள்வதோ, முடி வெட்டிக் கொள்வதோ கூடாது.

விளக்கம்: முகத் திருத்தமும், முடித்திருத்தமும் தன்னைப் பிறர் கண்டு ரசிக்க வேண்டும் என்பற்காகவே செய்யப்படுகிறது. முடி வளர்ப்பதும், மொட்டை போடுவதும் தனக்கு உலகத்தின் மீது பற்று இல்லை, இறைவனைப் பற்றி மட்டுமே சிந்தனை என்று காட்டிக் கொள்ளவே செய்யப்படுகிறது! மொட்டை போடப்பட்ட முகம் எப்படி அழகை இழந்து காட்சி தருமோ, அதைப் போலவே அடர்ந்த தாடி, மீசையும், பார்க்க சகிக்காது. தன்னுடைய சிந்தனையை பிறர் வேறு திசையில் திருப்பி விடக்கூடாது என்பதற்காகவே இக்கட்டுப் பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

17. புகை பிடிக்கக் கூடாது
.
விளக்கம்: தொடர்ந்து சிகரெட், பீடி புகைப்பதால் முதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதன் தொடர்ச்சி யாக சுவாச உறுப்புகளையும் அது தாக்கும். சுவாசம் கெட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மலைப் பிராயணத்தை கொலைப் பிரயாணமாக மாற்றி விடும்.

18. வெற்றிலைப் பாக்கு போடக்கூடாது

விளக்கம்: வெற்றிலைப் பாக்கு காம இச்சையைத் தூண்டக் கூடியது. இதனால் மனமும், உடலும் பாதிக் கப்படும்.

19. பகல் நேரத்தில் தூங்கக் கூடாது.

விளக்கம்: பகல் நேரத்தில் உறங்கினால் இது பழக்க மாகி, மலையில் நடக்கும்போதும் பிரயாணத்தைத் தொடர விடாமல் களைப்பையும், சலிப்புடன் கூடிய சோர்வை யும் ஏற்படுத்தி விடக்கூடும்.

20. இரவில் சிறு துண்டை விரித்தே தூங்க வேண்டும்.

விளக்கம்: மலைப் பிரயாணத்தில் அதிகமான சுமைகளைக் கொண்டு போக முடியாது. இதில் பாய், தலையணை, போர்வை முதலியவற்றைக் கொண்டு செல்ல முடியுமாப அத்துடன் காட்டில் துண்டு விரித்துப்படுப்பதன் மூலம் கொடிய விஷ ஜந்துக்களின் அபாயத்திலிருந்து நீங்கியவர்கள் ஆவோம். எப்படித் தெரியுமா? துண்டிலே தேள் போன்றவை இருந்தால் தெரிந்து விடும். வேறு கனத்த போர்வையில் கண்டுபிடிப்பது சிரமம்.

21. மாலை அணிந்தும் சந்திக்கும் ஆண் பக்தர்களை ஐயப்பா என்றும், பெண் பக்தர்களை மாளிகைப் புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டா என்றும், சிறுமிகளைக் கொச்சி என்றும் அழைக்க வேண்டும்.

விளக்கம்: இதனால் உள்ளம் பண்படுகிறது. ஆண்கள் பகவானின் திருவுருவம் என்றும், பெண்கள் சகோதரிகள் என்றும், சிறுவர்கள் பகவானின் பால் வடிவம் என்றும், சிறுமிகள் தங்கைகள் என்றும் உணர்வு உண்டாக அப்படிச் செய்யப்படுகிறது.

22. ஒரு அய்யப்ப பக்தர் இன்னொரு அய்யப்ப பக்தரை சந்திக்கும் போது `சாமி சரணம்’ என்று வணங்கித் தொழ வேண்டும். பேச வேண்டி இருந்தால் இடை இடையே சாமி சரணம் என்று சொல்ல வேண்டும். பேச்சை முடிக்கும்போதும் சாமி சரணம் என்று சொல்ல வேண்டும்.

விளக்கம்: இதனால் பணிவும், பக்தியும் வளருகிறது. போடப்பட்டிருக்கும் வேஷம் இறைவனுக்குரியது. பேசக் கூடிய பேச்சு இவ்வுலகுக்கு உரியது. எனவே இறைவனை மறந்து விடக் கூடிய சூழ்நிலை இருவரில் ஒருவருக்கு உண்டானாலும் உண்டாகலாம். அதை போக்கவே சாமி சரணம் சொல்லப்படுகிறது. மேலும் இந்த உலகில் அனைவரும் இறைவனின் அடியவர்கள் என்பதை நினைவூட்ட அடிக்கடி சரணம் சொல்லுவதும், காணும் போதும், பிரியும் போதும், சரணம் சொல்லுவதும் கடை பிடிக்கப்படுகிறது.

23. தினந்தோறும் காலையிலும், மாலையிலும் குளிக்க வேண்டும்.

விளக்கம்: இதனால் உடல் சுத்தம் அடைகிறது. களைப்பு அகலுகிறது. இறைவன் முன் உற்சாகத்துடன் பணியில் ஈடுபட முடிகிறது.

24. துக்க கரமான நிகழ்ச்சிகளில் ஐயப்ப பக்தர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் கலந்து கொள்ளக் கூடாது.
விளக்கம்: துக்க வீட்டிலிருந்து பரவும் துர்க்கிருமிகள் மலைப் பிரயாணத்துக்குத் தயாராய் உள்ள உடல் நிலையைக் கெடுத்து விடலாம். குடும்பத்தாரிடமும் கிருமிகள் ஒட்டி வந்த ஊறு விளைவிக்கலாம். ஆகவே அது தடை செய்யப்பட்டு உள்ளது.

25. பெண்களின் பூப்புனித நீராட்ட விழாவுக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ மேற்சொன்ன காரணங்களினாலேயே போகக் கூடாது. இதே விதமான விளக்கத்தை உள்ளடக்கியே மாத விலக்கான பெண்களைப் பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாத விலக்கான பெண்களைச் சுற்றி கிருமிகள் இருக்கும். எனவே தான் அய்யப்ப சாமிகளை கவனமாக இருக்க சொல்கிறார்கள்.

இவை அனைத்தும் மலைக்குச் செல்லும் முன் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விரத நெறிமுறைகள் ஆகும்.

இந்த கட்டுப்பாடுகளை சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் மீறி விடுவது உண்டு.

அதன் காரணமாக நாமும் மீறலாம் என்று மற்ற அய்யப்ப சாமிகள் யாரும் நினைக்க கூடாது. ஓரிருவர் தவறு செய்வதால், அதனால் ஊக்கம் கொண்டு நீங்களும் தவறி விடக்கூடாது. நாம் செய்யும் நல்லதும், கெட்டதுமான வினைகளே நம்முடன் வரக்கூடியவை.

இதை மனதில் நிலை நிறுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

 
Thanks n Regards
Jeevanandam K

Leave a comment